அனிமேஷனில் எம்.ஜி.ஆர்.!

முதலாவது தமிழ் 3டி அனிமேஷன் படம் என்ற பெருமையைப் பெற்றது 'இனிமே நாங்கதான்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வாலி பாடல்களைப் புனைய, பி.லெனின், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்களிக்க ரூ. 4 கோடியில் பிரமாண்டமாக உருவாகி, வெளியாகி பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்றது இனிமே நாங்கதான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் அனிமேஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந் நிலையில் எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து புரட்சித் தலைவன் என்ற பெயரில் புதிய அனிமேஷன் படத்தை உருவாக்கவுள்ளது மாயபிம்பம்.
விஜய், அஜீத் காலம் இது என்றாலும் கூட அவர்களையும் தாண்டி எம்.ஜி.ஆருக்கென்று ஒரு மாஸ் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த புரட்சித் தலைவன் படத்தை உருவாக்கப் போகிறது மாயபிம்பம்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்தான், எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம். அதன் பின்னர் அவர் 'நடித்து' வெளியாகப் போகும் படம் இந்த புரட்சித் தலைவன்தான்.
எம்.ஜி.ஆருக்கே உரிய மேனரசிங்க், ஸ்டைல்களை அப்படியே இந்த அனிமேஷன் படத்திலும் கொண்டு வரப் போகிறார்களாம். இக்காலத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இந்த அனிமேஷன் எம்.ஜி.ஆர். அசத்தலாக, அதே தேஜஸ், கெட்டப்புடன் இருப்பாராம்.
வெங்கி பாபு இந்த அனிமேஷன் படத்தை இயக்குகிறார். மாயபிம்பம் மீடியா நிறுவனத்திற்காக ஸ்ரீதேவி ராவ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 17ம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது.
சரி நாயகி யார்?
சரோஜாதேவி? ஜெயலலிதா? லதா? திரிஷா? நயனதாரா? ஷ்ரியா?
படம் வரும் வரை கெஸ் பண்ணுவோமே, காசா, பணமா?


Click it and Unblock the Notifications











