'Oscar' இனிமேல் 'Aaskar'!!

'Oscar' Films Private Ltd என்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன் பட நிறுவனத்தின் பெயராகும். இதற்கு இப்போது பெரும் சட்டச் சிக்கல் வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தட்ஸ்தமிழில் இதுதொடர்பாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், ஆஸ்கர் என்ற பெயருக்கும், அகாடமி விருது லோகோவுக்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. அதை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவது குறித்து தெரிவித்திருந்தோம்.
மேலும் இதுதொடர்பாக நமக்கு ஆஸ்கர் அகாடமி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்காட் மில்லர் அனுப்பிய இமெயிலில், உலகின் எந்தப் பகுதியில் உள்ள எவரும், ஆஸ்கர் விருது நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ளோம். இதை யாராவது மீறினால் அவர்கள் மீது காப்புரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பல வருடங்களாக ஆஸ்கர் என்ற பெயரையும், லோகோவையும் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, எனக்கு அப்படி எந்த நோட்டீஸும் வரவில்லை என்றார். ஆனால் இப்போது திடீரென தனது நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் மாற்றி விட்டார். ஆஸ்கர் நிறுவனத்திடமிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்திருப்பதையே இது காட்டுகிறது.
அதன்படி தசாவதாரம் படம் Aaskar Films P Ltd என்ற பெயரில் வெளியாகும். அதாவது Oscar - Aaskar ஆகி விட்டது. அதேபோல ஆஸ்கர் விருது படத்தை தனது லோகோவாக வைத்திருந்ததையும் மாற்றி, தனது மகன் சஞ்சித்தின் படத்தை லோகோவாக்கி விட்டார் ரவிச்சந்திரன்.
இனிமேல் Oscar என்ற பெயரையும், லோகோவையும் தனது படங்களில் பயன்படுத்தப் போவதில்லை என்றும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆனால் Aaskar என்ற பெயரும் கூட காப்புரிமைச் சட்ட விதி மீறலாகத்தான் இருக்கும். காரணம் Aaskar என்ற பெயரை உச்சரித்தால், Oscar என்றுதான் வருகிறது. ஒருவேளை 'ஏஸ்கர்' என்று உச்சரிக்க வேண்டுமோ என்னவோ, தெரியவில்லை!
ஆஸ்கர் நிறுவனம் பெற்றுள்ள காப்புரிமையின்படி Oscar என்ற பெயரை மாற்றியோ அல்லது அப்படியோ பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதாம்.
இது ரவிக்குத் தெரியுமா, இல்லையா என்று தெரியவில்லை!


Click it and Unblock the Notifications











