சூர்யாவுக்கு ஆறுதல் சொன்ன உதயநிதி!

சூர்யா, வடிவேலு, கேஎஸ் ரவிக்குமார் என ஆதவன் படத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டின் பின்னணியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் இருந்தார் என ஊடகங்களில் தகவல்கள் பரவின.
ஆதவன் படத்தில் நடித்ததற்காக சூர்யா, வடிவேலு, ரவிக்குமார் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி தயாரிப்பாளரை ஏமாற்றியதாகவும், அந்த கோபம்தான் இந்த ரெய்டின் பின்னணி என்றும் கூறினர். இதனால்தான் ஆதவன் படத்தின் தயாரிப்பாளரை விட்டுவிட்டு, மற்ற முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேர் வீட்டிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது.
ஆனால், இதற்கும் உதயநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சூர்யா, ரவிக்குமார், வடிவேலு ஆகியோர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகக் கூறினாலும் ஊடகங்களில் பல்வேறு கதைகள் உலா வர ஆரம்பித்தன.
இந் நிலையில், மேலும் இந்த வதந்தி தீயாகப் பரவாமல் தடுக்கும் பொருட்டு, சூர்யாவை அவரது வீட்டுக்குப் போய் சந்தித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த ரெய்டின் நிஜ பின்னணி பற்றி தமக்கும் ஒன்றும் தெரியாது என்று கூறிய உதயநிதி, மீடியாவில் இது சம்பந்தமாக வந்த எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் ஆறுதல் கூறிய உதயநிதி, தங்களின் அடுத்த படம் உறுதி என்றும், ஏற்கெனவே பேசிய சம்பளம் உறுதி என்றும் கூறிவிட்டு வந்ததாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











