ஆஸ்கர் பெருமையுடன் சேரிக்குத் திரும்பிய 'ஸ்லம்' சிறார்கள்

By Staff

Slumdog Millionaire Actors
மும்பை: எட்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த இளம் நடிகர்களான ரூபினா அலி, அஸாருதீன் இஸ்மாயில் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களது குடிசைப் பகுதிக்கு திரும்பினர். மாட்டு மூத்திர வாடைக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை தொடர ஆரம்பித்துள்ளனர்.

இருவரும் தங்களது ஹாலிவுட் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பியுள்ளனர்.

வியாழக்கிழமை இருவரும் மும்பையில் உள்ள கரீப் நகரி்ல உள்ள தங்களது சேரிப் பகுதிக்கு திரும்பி வழக்கமான வாழக்கையைத் தொடங்கினர்.

அஸாருதீனின் 'வீடு' அங்குள்ள ரயில்வே டிராக் அருகே உள்ள பிளாஸ்டிக் சீட்தான்!. பக்கத்தில் மூக்கை சிதறடிக்கும் மூத்திர வாடை. பசு மாடுகளின் புண்ணியத்தால் அந்த வாடையின் தாக்கம் படு மூர்க்கம். அதுதான் அஸாருதீனின் பூலோக சொர்க்கம்.

ரூபினாவின் 'வீடு'ம் பக்கத்தில்தான் உள்ளது. அங்குள்ள சாக்கடைக்கு அருகில் உள்ள இடத்தில் தனது பெற்றோர்களுடன் பெரிய சாக்குத் துணிகளை கீழே விரித்து தூங்கினாள் ரூபினா.

இருவரும் தங்களது குடிசைப் பகுதிக்குத் திரும்பியபோது அங்கு வசிப்பவர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து வரவேற்பு அளித்து தடபுடல்படுத்தி விட்டனர். நடனம், மாலைகள், இனிப்புகள், ஆனந்தக் கண்ணீர் என இரு குழந்தைகளையும் அங்குள்ள மக்கள் வாஞ்சையுடன் வரவேற்றனர்.

ரூபினாவும், அஸாருதீனும் பிறந்தது இந்த சேரிப் பகுதியில்தான். ஸ்லம்டாக்கில் நடிக்க நிஜமான சேரிக் குழந்தைளை ஸ்லம்டாக் தயாரிப்பாளர்கள் தேடியபோது இருவருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது.

படம் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டவுடன், ரூபினாவையும், அஸாருதீனையும் ஹாலிவுட்டுக்கு வரவழைத்து அந்த அனுபவத்தை அவர்களுக்கும் அளிக்க முடிவு செய்து அங்கு அழைத்துச் சென்றனர்.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக இருவரும் விமானத்தில் பயணித்து ஆனந்தம் அடைந்தனர்.

விமான பயணம் குறித்து ரூபினா கூறுகையில், பிளேன் ரொம்பப் பெரிசாக இருந்தது. கீழே இருந்துதான் இதுவரை பிளேனைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு சின்னதாக இருக்கிறதே என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் பிளேன் பெரிதாக இருக்கிறது என்றாள் ரூபினா.

சரி, அமெரிக்கா எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, சூப்பராக இருந்தது. ஆஸ்கர் மேடையில் இருந்தபோது ரொம்ப வியப்பாக இருந்தது. எல்லோருமே ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டனர்.

பிறகு நாங்கள் எல்லோரும் டிஸ்னிலேன்ட்டுக்குப் போனோம். அங்கு எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

ஆனால் எனக்கு சாப்பாடுதான் பிடிக்கவில்லை. அங்கு வேறு மாதிரி சாப்பிடுகிறார்கள். நம்ம ஊர் சாப்பாடு கிடைக்காமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றாள் ரூபினா.

அஸாருதீன் நிலைமையே வேறு. அமெரிக்காவுக்குப் போய் சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட இந்தக் குட்டிப் பையன், ஊர் திரும்பியதும் முதல் வேலையாக பிரியாணியை ஒரு பிடி பிடித்தான். ஒரு ஹோட்டலுக்குப் போய் பிரியாணி சாப்பிட்டதும்தான் அவனுக்கு திருப்தியே வந்ததாம்.

பிளாஸ்டிக் ஷீட்டுக்குக் கீழ் குடியிருந்து வரும் அஸாருதீன் குடும்பத்தினர் ஸ்லம்டாக் அனுபவம் தங்களது வாழ்க்கை நிலையை மாற்ற உதவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மகனுடன் லாஸ் ஏஞ்சலெஸ் போயிருந்த அஸாருதீனின் தாயார் கூறுகையில், எங்களுக்கு நல்ல வீடு கிடைத்தால் நலமாக இருக்கும். அரசு வீடு கொடுக்கப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் யாரும் எங்களை இதுவரை அணுகவில்லை.

நீண்ட காலமாகவே நல்ல வீடு கிடைக்க வேண்டும் என நான் அல்லாவைப் பிரார்த்திக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் அவரிடமே விட்டு விட்டேன் என்றார்.

இதுவரை சுதந்திரப் பறவைகளாக சுற்றித் திரிந்த அஸாருதீனையும், ரூபினாவையும் ஸ்லம்டாக் அனுபவம் முற்றிலும் மாற்றிப் போட்டு விட்டது. ஏகப்பட்ட பத்திரிக்கையாளர்கள், கேமராக்கள், வீடியோ கேமராக்கள் என அவர்களை நெளிய வைத்து வருகின்றனராம்.

பிரியாணியை சரியாக சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவும் கூப்பிடுகிறார்கள் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறான் அஸார்.

அந்த சேரிப் பகுதியின் விஐபிக்கள் ஆகி விட்டனர் இந்த இருவரும்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத் தயாரிப்பாளர்கள் இந்த இரு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரையும் ஒரு பள்ளியில் சேர்த்து விட்டுள்ளனர். அவர்களது பெயரில் ஒரு நிதியையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

அவர்களுக்கு எப்படியெல்லாம் நம்மால் உதவ முடியும் என நினைத்தபோது கல்வியை வழங்குவது என்ற முடிவுக்கு வந்தோம். அதனால்தான் இந்த ஏற்பாடு என்கிறார் இயக்குநர் டேனி பாயில்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மிக அருமையான பள்ளியி்ல அவர்களை சேர்த்துள்ளோம். அவர்களது 18 வயது வரை அங்கு அவர்கள் படிக்கலாம். அதுவரை தேவைப்படும் கட்டணத்தை நாங்கள் கட்டி விட்டோம்.

மேலும் அவர்களது பெயரில் உருவாக்கியுள்ள நிதி, 18 வயதுக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கும். அதை வைத்து அவர்கள் மேல் படிப்பை முடிக்கலாம். நிச்சயம் அவர்களது வாழ்க்கை முறை மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் பாயில்.

விண்ணில் ஏறி ஹாலிவுட் நட்சத்திக் குவியலுக்கு மத்தியில் பூரிப்போடு ஜொலித்து விட்டு வந்தாலும் மீண்டும் அதே பழைய குடிசை வாழ்க்கைக்கே திரும்பியுள்ளனர் அஸாருதீனும், ரூபினாவும்.

அந்த 'ஸ்லம்டாக்' - சினிமா, இந்த ஸ்லம்தான் - நிஜம் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

அஸாருதீனை அடித்த தந்தை:

ஆஸ்கர் பெருமையுடன் வீடு திரும்பிய அஸாருதீனை, டயர்ட் ஆக இருக்கிறது, கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்காக அவரது தந்தை போட்டு அடித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து வீடு திரும்பிய அஸாருதீன் தான் சோர்வாக இருப்பதாகவும், ஓய்வெடுக்க விரும்புவதாகவும் தந்தை தந்தை முகம்மது இஸ்மாயிலிடம் கூறியுள்ளான்.

ஆனால் அதை தந்தை இஸ்மாயில் ஏற்கவில்லை. தான் தூங்கப் போவதாக அஸாருதீன் தொடர்ந்து கூறவே கடுப்பான இஸ்மாயில் அக்கம்பக்கத்தினர் நிற்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் தனது பையனைப் போட்டு அடித்துள்ளார்.

இதையடுத்து வீட்டுக்குள் ஓடியுள்ளான் அஸாருதீன். அப்படியும் விடாமல் அடித்துள்ளார் இஸ்மாயில். அவரது மனைவி தடுத்தும் கேளாமல் அடித்ததைப் பார்த்து அஸாருதீனைப் பார்க்க வந்தவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.

அதற்கு முன்புதான், அஸாருதீன் சேரிப் பகுதிக்கு திரும்பி வந்தபோது அவனை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு இஸ்மாயில் ஊர்வலமாக பெருமையுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X