கந்தசாமி... 'கிரேட்' சாமி - வாங்கிய 'அபிராமி'!

கலைப்புலி தாணு தயாரித்து, விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி படத்துக்கு ரூ.4.01 கோடி கொடுத்து சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் ராமநாதன்.
லட்சங்களில் போய்க் கொண்டிருந்த சென்னை நகர விநியோக உரிமையை பல கோடி கொடுத்து எடுத்ததுடன், அதை வெளியில் பகிரங்கமாகச் சொல்லி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தவர் அபிராமி ராமநாதன்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி திரைப்படத்துக்கு ரூ.6 கோடிக்கும் மேல் கொடுத்து அனைத்து விநியோகஸ்தர்களையும் அதிர வைத்தவர், திட்டமிட்டபடி அந்தத் தொகையை சிவாஜி ரிலீசான 50 நாட்களுக்குள் எடுத்து ஆச்சரியப்படவும் வைத்தார்.
கோலிவுட் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தை சென்னை மாநகரில் மட்டும் 18 திரையரங்குகளில் ரிலீஸ் செய்த துணிச்சல்காரர் ராமநாதன்தான். அவர் கொடுத்த தைரியம்தான் தசாவதாரத்தை 16 திரையரங்குகளில் வெளியிட வைத்தது. குருவியைக்கூட 14 தியேட்டர்களில் வெளியிட்டுப் பார்க்கச் செய்தது.
சிவாஜியாவது பரவாயில்லை, ரஜினி, ஷங்கர், ரஹ்மான் என பெருந்தலைகள் பின்னிய படம்... இப்போது கந்தசாமிக்கும் கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான முக்கியத்துவம் தந்து விநியோக உரிமை பெற்றுள்ளார் அபிராமி ராமநாதன்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், 'கந்தசாமி மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் சரியான சம்மர் ட்ரீட்டாக இருக்கும். எனக்கும் சரி, கலைப்புலி தாணுவுக்கும் சரி இது ஒரு நல்ல டீல் என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் படம் நன்றாகப் போகும்', என்றார்.
இந்தப் படம் சென்னையில் மட்டும் 18 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.
ஏப்ரல் இறுதி வாரத்தில் அசத்த வருகிறது கந்தசாமி.


Click it and Unblock the Notifications











