ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் போட்டி!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள அட, ஏ வே ஆப் லைப் என்ற படத்திலிருந்து இரு பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் போட்டி ஒன்றை நோக்கியா நிறுவனமும், பிக் மியூசிக்கும் நடத்தவுள்ளன.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'குல்பிஷா' மற்றும் 'கம் ஷம்' ஆகிய இரு பாடல்களையும் ரீமிக்ஸ் செய்ய வேண்டும். இந்த ரீமிக்ஸ் போட்டியின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், இது ஒரு புதிய முயற்சி. கம்போசிங் மற்றும் ரீமிக்ஸில் தங்களது திறமையை காட்ட இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. 'குல்பிஷா' மற்றும் 'கம் ஷம்' ஆகிய இரு பாடல்களும் நல்ல ரிதத்துடன் கூடியவை. ரீமிக்ஸுக்கு பொருத்தமானவை என்றார்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், நோக்கியாவின் 'எக்ஸ்பிரஸ் மியூசிக்' இணைய தளத்திற்குச் சென்று தங்களுக்குப் பிடித்த பாடலை ரீமிக்ஸ் செய்ய வேண்டும். இறுதி ரீமிக்ஸுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட வாய்ப்பளிக்கப்படும். அவரது இசை ஆல்பத்தில் பங்கேற்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கும்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரஹ்மான் பேசுகையில், இசை உலகம் பல்வேறு பரிணாமங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் வினைல் ரெகார்ட் இருந்தது. பின்னர் கேசட் வந்தது. இப்போது சிடி,டிவிடி என மாற்றம் கண்டுள்ளது.
நடுத்தர வயதினருக்கும், இசைக்கும் இடையிலான தொடர்பு குறைந்து வருகிறது. அவர்களிடம் உள்ள படைப்பு திறமையை இந்த போட்டியின் மூலம் வெளிக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். இசை உயிருடன் கலந்த விஷயம். அதை ரசிகர்களின் ரசனைக்கேற்ப தர வேண்டும் என்றார்.
தற்போது ஆல்பம் தயாரிப்பிலும், 8 பாலிவுட் படங்களுக்கு இசை அமைக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











