twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிச 3- முதல் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'... பிரமாண்டமாக வரவேற்க ஏற்பாடு!

    By Chakra
    |

    Mamooty Ambedkar
    அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் தமிழில் வெளியாகிறது.

    2002-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.

    காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.

    அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, "காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது", என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.

    பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: "காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!"

    இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

    அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக 'சலாம் பாம்பே' புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.

    'ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.

    தமிழில், வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.

    தலித் மக்கள் என்றல்லாமல், திருமணம், மறுமணம், விவாகரத்து போன்றவற்றில் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் ஒருவர்தான். எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யத் தயாராகின்றனர் தலித் இயக்கத்தினர்.

    படம் வெளியாகும் தினத்தன்று, மேள தாளத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது அம்பேத்கர் இளைஞர் இயக்கம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X