ஆர்த்தி-மாஸ்டர் கணேஷ் அக். 23ல் குருவாயூரில் திருமணம்

கரிமேடு கருவாயன், புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாஸ்டர் கணேஷ். அதேபோல் என் தங்கை கல்யாணி, தென்றல் சுடும், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆர்த்தி.
தற்போது இவர்கள் இருவரும் சின்னத்திரையில் இணைந்து நடித்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. தற்போது இருவரும் இணைந்து கலைஞர் டிவியில் தீராத விளையாட்டு என்ற நிகழ்ச்சியை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டுள்ளது. அவர்களும் பச்சை கொடி காட்டவே தற்போது வரும் 23ம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம் நடக்க இருக்கிறது.
25ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
ஆர்த்தி கூறுகையில், மூன்று மாதங்கள் முன்பு வரை எங்களுக்குள் காதல் ஏற்படவில்லை. திருமணத்துக்கு பின்னர் அவருடன் சேர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். என்எஸ் கிருஷ்ணன்-மதுரம், தங்கவேலு-சரோஜா ஜோடி போல நிஜ வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாக வாழ்ந்து காட்டுவோம் என்றார்.
நடிகை ஆர்த்தி நடித்து கொண்டே தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











