நடிகர்கள் சம்பளப் பிரச்சினை - திரையுலகம் அவசர ஆலோசனை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை பிலிம்சேம்பரில் நேற்று நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சுந்தர் ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆயின. இதில் பல பெரிய படங்கள் தோல்வியை தழுவின. இதனால் தமிழ் திரையுலகையே ஆட்டம்காண வைத்திருக்கிறது. இந்த நிலையை எப்படித் தடுக்கலாம் என பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தனர்.
தியேட்டர் கட்டணம்தான் மக்களின் பிரச்னையாக உள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு முதல் இரு வாரங்களுக்கு ரூ. 100 என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். பல தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ. 100, ரூ. 50 என உள்ளது.
எனவே டிக்கெட் விலை இதைவிட குறைவாக ரூ. 10, ரூ. 20 மற்றும் ரூ. 30 ஆக இருந்தால் தியேட்டருக்கு மக்கள் அதிகமாக வருவார்கள். வெளியூர்களில் முதல் இரு வாரங்களுக்குப் பிறகு டிக்கெட் விலை குறைத்து விளம்பரம் செய்தால் நலல கூட்டம் வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதுப் படங்களின் டிவிடி மற்றும் சிடி திருட்டுத்தனமாக வெளியே வந்துவிடுகிறது. இதனாலும் பட வியாபாரம் பாதிக்கப்படுகின்றன. படம் வெளியாகி 6 மாதத்துக்கு பின் வெளிவருவது போல சிடி, டிவி உரிமையை நிறுவனங்களுக்கு தரப்பட்டு வரிகிறது. இனி படம் வெளியாகி நூறு நாட்களுக்குள் வெளிவருவது போல பட சிடி உரிமையை தந்துவிடலாம்.
எந்த நிறுவனத்துக்கு சிடி உரிமை தருகிறோமோ அவர்கள் திருட்டு சிடியை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் கூறினர்.
படவெளியீட்டை முறைப்படுத்தல்
பல படங்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்குகின்றன. வாரத்துக்கு நான்கைந்து படங்கள் வெளியாகும்போது, தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது.
எனவே இனி வாரம்தோறும் இரு படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டனர்.
நடிகர் - நடிகை சம்பளம்
நடிகர் நடிகைகளின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துவிட்டதால் அதிலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன் கூறியதாவது:
தமிழ் சினிமாவை பொருத்தவரை தியேட்டர் டிக்கெட் விலை தொடங்கி, நடிகர்கள் சம்பளம் வரை நிறைய பிரச்னைகள் உள்ளன. அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியாது. படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே முதல் கட்டமாக தியேட்டர் கட்டணம் குறைப்பது தொடர்பாக நடவடிக்கையில் இறங்குவோம். இன்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக பிப்ரவரி 22ம் தேதி நடக்கும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விரிவாகப் பேசுவோம். அப்போது தயாரிப்பாளர்களின் யோசனைகளையும் கேட்போம், என்றார் பிரபாகரன்.


Click it and Unblock the Notifications











