தசாவதாரம் படத்திற்கு எதிரான வழக்கு டிஸ்மிஸ்

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படம் ஜூன் 6ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன கழகம் என்கிற அமைப்பும், கல்யாண சுப சமிதி என்கிற அமைப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுக்கு ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தன.
ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சாமி கோவிந்த ராமானுஜ தாசர் தாக்கல் செய்திருந்த மனுவில், தசாவதாரம் என்றால் விஷ்ணுவின் தசாவதாரம்தான் இந்துக்களுக்கு நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட புனிதமான பெயரை இப்படத்திற்கு வைத்தது தவறானதாகும்.
மேலும், இப்படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
புனிதமான ராமானுஜர் வேடத்திலும் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் படத்தில் வன்முறைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தேவையில்லாத பதட்டத்தையும், மோதலையும் ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.
கல்யாண சுப சமிதி சார்பில் அதன் தலைவர் சாந்த சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவில், இப்படத்தால் பெரும் கலவரம் ஏற்படும், சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும், கலவரமும் ஏற்படும். இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான காட்சிகளை நீக்கி விட்டு படத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இரு மனுக்களையும் நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகளின் தீர்ப்பில், படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் ஆட்சேபத்துக்குரியதாக இல்லை. அவதூறானதாகவும் இல்லை.
சென்சார் போர்டு ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கி விட்டார், தணிக்கை செய்து விட்டால், பொதுமக்கள் படத்தைப் பார்க்க அனுமதி வழங்கி விட்டால் அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. படம் திரையிடப்படுவதைத் தடுக்கவும் முடியாது.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.
படத்தைப் பார்க்காமலேயே மனுதாரர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது தேவையில்லாதது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள்தான் படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் படத்ைதப் பார்க்க மிகவும் ஆவலாக காத்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.
தசாவதாரம் படத்திற்கு எதிரான இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தசாவதாரம் படக் குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி படம் திரைக்கு வருவதில் எந்தத் தடங்கலும் இல்லை.
ஏற்கனவே கமல்ஹாசனின் விருமாண்டி (சண்டியர்), மும்பை எக்ஸ்பிரஸ், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டன. ஆனால் அத்தனை வழக்குகளிலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











