twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனியில்லை, இசையமைப்பாளர் தொல்லை!

    By Staff
    |

    Leka Rathnakumar
    ''சார்... அந்த இங்கிலீஷ் படத்துல போட்டிருந்தாங்களே ஒரு அதிரடி பிஜிஎம்... அதே மாதிரி ஒண்ணை நம்ம படத்துக்கும் போட்ருங்க...''

    ''இந்த சண்டைக்கு, அந்த கொரியப் பட சவுண்ட் டிராக்கை யூஸ் பண்ணிடலாம்..." என்றெல்லாம் பிண்ணனி இசைக்காக 'பிட்' அடிக்கும் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் சிலர் அதற்காக வாங்கும் தொகை கோடியைத் தொடுகிறது.

    ஆனால், இதைத் தட்டிக் கேட்க முடியாது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால். கேட்டால், அவர்களுக்குத் தேவையான இசை கிடைக்காது. படம் லேட்டாகும். எதற்கு வம்பு என்கிற மனப்பான்மை.

    ஆனால் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், கேட்ட மாதிரி இசை ஈஸியாகக் கிடைத்தால்... இப்படி ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் நேராக லேகா ரத்னகுமாரை அணுகலாம்.

    இசையமாப்பாளர்கள் கிடையாது, ஆர்க்கெஸ்ட்ரேஷன் செலவு கிடையாது, ஸ்டுடியோ வாடகை போன்ற எந்த எக்ஸ்ட்ரா செலவும் இல்லாமலேயே, ஆனால் ஒரு படத்துக்குத் தேவையான மொத்த இசையையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறார் ரத்னகுமார்.

    தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இதயம் நல்லெண்ணை விளம்பரப் படம் எடுத்துப் பிரபலமாகி, பின்னர் இசை வங்கி ஒன்றை அமைத்தாரே, அதே லேகா ரத்னகுமார்தான் இவர்.

    நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருக்கும் அவரது அலுவலகத்தை ஒரு இசை நூலகம் என்பதே பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இசைத் தொகுப்பு சிடிக்கள் இங்கே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

    இவைபோக இன்னும் ஆயிரக்கணக்கான இசைத் தொகுப்புகள் இவருடன் பங்குதாரராக உள்ள சொனாட்டான் நிறுவனத்திடம் உள்ளன.

    அதன் வெப்சைட்டுக்குள் போய் தேவையான இசைத் தொகுப்பைத் தேர்வு செய்து, அதற்கான உரிமையை சில ஆயிரங்கள் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

    எப்படி உருவானது இந்த யோசனை?

    "ஒரு படத்தை பிரமாண்டமாகத் தயாரிப்பார்கள். ஆனால் பின்னணி இசைச் சேர்க்கும் போது அதற்கான செலவுக்குக் கூட பணமில்லாமல் தயாரிப்பாளர்கள் சிலர் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சினிமாவில் என்னென்ன சூழ்நிலைகள் உண்டோ அவற்றுக்குத் தக்கபடி முன்கூட்டியே இசையமைத்து சிடிக்களாகக் கொடுத்துவிட்டால் தங்கள் படம் முழுமைக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே... செலவும் குறைவு, கடைசிநேர பரபரப்பு, கவலையும் இருக்காது பாருங்கள். மொத்தம் ரூ.40,000 ரூபாய் இருந்தால் போதும், ஒரு படத்துக்கான பின்னணி இசை சர்வதேசத் தரத்தில் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும்" என்கிறார் ரத்னகுமார்.

    இதற்காகவே ஜெர்மனியின் சொனாட்டான் நிறுவனத்துடன் இணைந்து லேகா-சொனாட்டான் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    "இப்படி ஒரு இசை வங்கி அமைப்பது குறித்து நான் நீண்டகாலமாகப் பேசி வந்தாலும், அதை இந்தியாவில் நடைமுறைப்படுத்த உகந்த நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள், அதைவிட அதிகமான எஃப்.எம்கள், பிரமாண்டமான படங்கள்... என இந்திய பொழுதுபோக்குத் துறை பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் இன்றைய சூழல்தான் அதற்கான தருணம்.

    வெளிநாடுகளில் எப்போதோ இம்மாதிரி இசையை வாங்கி உபயோகிக்கும் முறை வந்துவிட்டது. இங்கே நாம் விழிகள் விரிய ஆச்சர்யமாய் பார்க்கும் ஸ்பைடர்மேன், ஷ்ரெக், ஹாரி பாட்டர், மம்மி போன்ற பிரமாண்ட ஹாலிவுட் படங்களின் பின்னணி இசைக்குச் சொந்தக்காரர்கள் இந்த சொனாட்டான் நிறுவனம்தான்.

    அவ்வளவு ஏன், ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இசையை வழங்கப் போகிறவர்களும் இவர்கள்தான். இந்த சொனாட்டோன் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி நான்தான்.

    ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த இசை நிறுவனம், சினிமாவில் வரும் அத்தனை சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, பின்னணி இசையை மிக நேர்த்தியாக உருவாக்கி வைத்திருக்கிறது. நமது நாட்டில் உள்ள பாரம்பரிய இசையை, முன்னணி இசையமைப்பாளர்களின் உதவியுடன் நான் உருவாக்கி வைத்திருக்கிறன்.

    என்னைப் போலவே உலகம் முழுவதிலும் பல பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் சொனாட்டான், உலகின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த இசை வடிவங்களையும் வைத்திருக்கிறது. எந்த புராஜக்டுக்கு எந்த மாதிரி இசை வேண்டுமானாலும் இந்தத் தொகுப்புகளில் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் புதுப்புது இசைத் தொகுப்புகளை நாங்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பதால், ரிப்பிட்டேஷன் என்ற குறை வரவும் வாய்ப்பில்லை..." என்கிறார் ரத்னகுமார்.

    இதுவரை 200 விளம்பரப் படங்களை எடுத்துள்ள இவர், அவை அனைத்துக்கும் தனது இசை வங்கியிலிருந்துதான் இசையை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். பல முன்னணி இயக்குநர்களே கூட, கடைசி நேரத்தில் இசையமைப்பாளர்களுடன் ஏற்பட்டுவிடும் மனக்கசப்பில், பின்னணி இசைக்காக இவரைத்தான் நாடியிருக்கிறார்கள்.

    பி.வாசு இயக்கிய பத்தினி என்ற படத்தில் முழு பின்னணி இசையும் இந்த லைப்பரியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். படம் முடிந்த பின் பின்னணி இசைக்காக மட்டும், குறைந்தது 3 லட்சமாவது செலவு செய்யும் தயாரிப்பாளர்கள், இந்த முறையைப் பயன்படுத்தினால் வெறும் நாற்பதாயிரம் போதும். அதிலேயே மூன்று படங்களை எடுத்துவிடலாம். காரணம் ஒரே சிடியில் 60க்கும் மேற்பட்ட ட்ராக்குகள் உள்ளன.

    இதற்காக லேகா ரத்னகுமாரைத் தேடியும் போகத் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தே இசையைத் தேர்வு செய்யலாம். sonoton.com என்ற வலைதளத்துக்குள் நுழைந்தால்போதும், எந்த இசை தேவையோ, அதை தேர்வு செய்து அந்த கோட் நம்பரைக் கொடுத்தால், அந்த இசை சி.டியை இரண்டே நாட்களில் தயார் செய்து தருகிறார் லேகா ரத்னகுமார்.

    அந்த இசையை ஒரு ஆண்டு பயன்படுத்திக் கொள்ளும் லைசென்ஸ் உங்களுக்குக் கிடைத்துவிடும். ஒரு ஆண்டுக்குப் பின் அதை திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.

    தமிழ் சினிமா பல விஷயங்களில் எவ்வளவோ மாறிவிட்டது. இப்போது இன்னொரு மாற்றத்துக்குத் தயாராகிறது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X