twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிக்க வரும் எம்.ஜி.ஆர். கார்

    By Staff
    |
    M.G.Ramachandran
    எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசடர் கார் சினிமாவில் நடிக்கவுள்ளது.

    மறைந்து 20 ஆண்டுகள் ஆனாலும் அவரது ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம்ஜிஆர்.

    அவர் பயன்படுத்திய, பரிசாகப் பெற்ற பொருட்களைப் பார்த்துச் செல்ல இன்றும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகிறார்கள், சென்னை ஆற்காடு சாலை எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் வரிசையில் நின்று பார்த்துப் பரவசப்பட்டுச் செல்கிறார்கள்.

    இங்கே வைக்கப்பட்டுள்ள அரிய பொருட்களில் ஒன்று எம்.ஜி.ஆரின் நீல நிற கார். தன் இறுதிக் காலம் வரை அவர் பயன்படுத்திய வாகனம் அது.

    முதல்வரான பிறகு அரசு அளித்த கார்கள் எதையுமே எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, அன்றைக்கு பிரபல தொழிலதிபர் ஏ.சி.முத்தையா பரிசாக அளிக்க முன் வந்த கான்டெஸ்ஸா கிளாஸிக் காரையும் மறுத்துவிட்டார்.

    இன்னொரு தொழிலதிபர் சகல வசதிகளும் பொருத்தப்பட்ட பென்ஸ் காரை வழங்க ஆசைப்பட்ட போதும் மறுத்தவர் எம்.ஜி.ஆர். தன் சொந்த செலவில் வாங்கிய அம்பாசிடர் காரை மட்டுமே அலுவலக உபயோகத்துக்காகப் பயன்படுத்தி வந்தார்.

    இந்த ஒரு கார் மட்டுமல்ல, இன்னும் பல கார்களை வைத்திருந்தார் அவர். பொதுவாகவே புதுப் புது கார்கள் வாங்குவது அவருக்குப் பிடிக்கும். செவர்லே மற்றும் பியட் கார்களையும் கூட எம்.ஜி.ஆர். அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இவற்றில் பியட் காரும் ஒரு பழைய அம்பாசடர் காரும் இன்னும் கூட ராமாவரம் தோட்டத்தில் உள்ளன.

    வீட்டில் அவரும் ஜானகி அம்மாளும் பயன்படுத்திய ஒரு அம்பாசடர் காரை இப்போது கருமாரி கந்தசாமி என்ற தயாரிப்பாளர் (கரகாட்டக்காரன் படத்தைத் தயாரித்தவர்) தனது படத்தில் ஒரு கேரக்டராகவே பயன்படுத்தப் போகிறார்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் இந்தக் காரை நடிகர் ரமேஷ் கண்ணாவின் உறவினர் ஒருவருக்கு ஜானகி அம்மாள் பரிசாகக் கொடுத்துவிட்டாராம். அதைக் கேள்விப்பட்ட கந்தசாமி, நேரில் போய் எம்.ஜி.ஆரின் காரை கேட்டுப் பெற்றுள்ளார்.

    பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் எல்லாம் அவன் செயல் எனும் படத்தில்தான் இந்தக் கார் நடிக்கப் போகிறது.

    எம்.ஜி.ஆரின் கார் பற்றி தகவல் தேடியபோது சில ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

    முதல்வராக இருந்த பதினோரு ஆண்டு காலத்தில் அரசு சலுகைகள் (சட்டமன்ற சம்பள படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப் படி, இதர மருத்துவச் செலவுகள்) எதையுமே அவர் பெற்றுக் கொண்டதில்லை என்கிறது தமிழ்நாடு அரசின் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான செய்திக் குறிப்பு.

    அவ்வளவு ஏன், வீட்டு மராமத்துக்கென அரசு ஆண்டுதோறும் அவருக்கு அனுமதித்த பல லட்ச ரூபாயை ஒருமுறை கூட பெற்றுக் கொண்டதில்லையாம். அரசு வழங்கிய மேசை நாற்காலிகள் கூட தன் வீட்டுக்கு வரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

    தன் சொந்த செலவில் 1980-லேயே வீட்டில் டிஷ் ஆண்டெனா அமைத்திருக்கிறார். இதற்காக அன்றைக்கு மிகப் பெரிய டவர் ஒன்றையும் தன் வீட்டுக்குப் பின்புறம் எழுப்பியிருக்கிறார். தமிழகத்தின் முதல் டிஷ் ஆம்டெனா இதுதான் என்கிறார் எம்.ஜி.ஆர். பற்றி நிறைய தகவல்களைச் சேகரித்துள்ள இதயக்கனி பத்திரிகை ஆசிரியர் எஸ்.விஜயன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X