குசேலனுக்கு ரூ. 100 கோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நயனதாரா - மீனா - பசுபதி - வடிவேலு நடிப்பில், பிவாசு இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குசேலன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் விநியோக உரிமை சத்தம் போடாமல் நடந்து முடிந்துள்ளது.
படத்தின் உள்ளூர் உரிமையை வாங்க பிரமிட் சாய்மிரா உள்ளிட்ட 6 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முட்டி மோதின. இதில் பிரமிட் நிறுவனத்திற்கே வெற்றி கிடைத்தது. இரு மொழிகளிலும் இந்தியாவில் திரையிடும் உரிமையை அந்த நிறுவனம் ரூ. 64 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்தியாவுக்குள் இப்படத்தை நேரடியாகவோ அல்லது மினிமம் கியாரண்டி அடிப்படையிலோ, எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளும் உரிமை பிரமிட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உரிமையை ரூ. 40 கோடி கொடுத்து ஐங்கரன் ஈராஸ் இன்டர்நேஷனல் வாங்கியுள்ளது. இந்த நிறுவனம்தான் ரஜினியின் அடுத்த படமான ரோபோட்டை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ரூ. 40 கோடி என்கிற தொகையை இன்னும் இறுதி செய்யவில்லையாம். எனவே இன்னும் பிசினஸ் முடியவில்லை என்று தெரிகிறது.
குசேலன், மீடியம் பட்ஜெட் படமாகும். இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வெறும் 20 நாட்களை மட்டுமே ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் அதற்குள் படம் விற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
படத்தின் 40 சதவீத ஷூட்டிங்கை பி.வாசு முடித்து விட்டாராம். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் 60 சதவீதம் முடிந்து விட்டதாம். கிளைமாக்ஸ் காட்சிகளை ஆலப்புழை மற்றும் பொள்ளாச்சியில் அடுத்த வாரம் ஷூட் செய்யவுள்ளார்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ஆகஸ்ட் 2வது வாரத்தில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











