'படிக்காதவன்' ஷூட்டிங்கில் குண்டு வெடித்து வில்லன் காயம்!

சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடிக்கும் படம் 'படிக்காதவன்'. கடந்த ஒருவாரமாக இதன் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வில்லனுடன் தனுஷ் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
பாளையங்கோட்டையில் தொழிலதிபர் ஒருவரை ரவுடிகள் நடுரோட்டில் வெட்டிக் கொல்லும் காட்சியும், காரில் செல்லும் எம்.எல்.ஏவை ரவுடிகள் பைக்கில் துரத்தி சென்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இக்காட்சிகளில் வில்லன்களாக சந்தான பாரதி, காதல் தண்டபாணி, சசிகுமார், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்தனர்.
நயினார்குளத்தின் கரையில் ஹீரோவின் நண்பர்களை, வில்லன்கள் ஜீப்பில் துரத்தி தாக்குவது போன்றும், அவர்களை நண்பர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்றும் நேற்று படமாக்கப்பட்டது.
மேலும் துப்பாக்கியால் சுடும் போது, ஜீப் கண்ணாடியில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள குண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்பட்டன. இதில் ஒரு குண்டு தவறி வில்லன் நடிகர் கூல் சுரேசின் இடது காலில் விழுந்து வெடித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
உடனடியாக அவரை படப்பிடிப்பு குழுவினர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது காலில் 6 தையல் போடப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











