For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆம்... நாங்கள் விருந்தாளிகள்தான்! -கருணாநிதி

By Staff
|

Karunanidhi
சென்னை: 'அதிகாரிகள் நிரந்தரமாக இருப்பார்கள், எங்களைப் போன்ற அமைச்சர்கள் விருந்தினர்கள்தான். ஆனால் நாங்கள் விருந்தை அளித்து விட்டுச் செல்லும் விருந்தினர்கள்' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

2007-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விழாவுக்கு தலைமை தாங்கினார்.

திரைத்துறையில், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், பரத், வினித், நடிகைகள் மீரா ஜாஸ்மின், நயன்தாரா, அசின், குணச்சித்திர நடிகர் மா.பசுபதி, குணச்சித்திர நடிகை ஷோபனா, நகைச்சுவை நடிகர் ஆர்.வையாபுரி, பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி, வசனகர்த்தா கே.வேதம்புதிது கண்ணன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி, புகைப்பட கலைஞர் சித்ரா சுவாமிநாதன், பத்திரிகையாளர் நவீனன்,

இயல் துறையைச் சேர்ந்த சிறுகதை நாவலாசிரியர் ஆ.மாதவன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, எழுத்தாளர் அ.மறைமலையான், செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி, இலக்கிய ஆய்வாளர்கள் பெரு.மதியழகன், சரளா ராஜகோபாலன், தமிழறிஞர் அவ்வை நடராஜன், பேச்சாளர் எஸ்.மாசிலாமணி, சமய சொற்பொழிவாளர் சுகி.சிவம்,

இசை ஆசிரியர்கள் சீர்காழி ஆர்.ஜெயராமன், எம்.எஸ்.முத்தப்ப பாகவதர், குரலிசைக் கலைஞர்கள் எஸ்.சீனிவாசன், வீ.செ.சிவகுமார், இசையமைப்பாளர் வெ.தாயன்பன், வயலின் எஸ்.கண்ணன், மிருதங்கம் வழுவூர் ரவி, டிரம்ஸ் ஏ.டிரம்ஸ் சிவமணி, இறையருட் பாடகர்கள் எஸ்.சதாசிவன், வீரமணி ராஜ×, இயற்கலை பண்பாட்டுக் கலைஞர் வி.சா.குருசாமி தேசிகர், நாதசுரம் டி.வி.ராஜகோபால் பிள்ளை, எஸ்.வி.மீனாட்சி சுந்தரம், தவில் டி.எம்.ராமநாதன், ஆ.மணிகண்டன்,

நாட்டியம் மற்றும் நாடகத்துறையைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் ஷைலஜா, பரதநாட்டிய கலைஞர்கள் ஸ்வேதா கோபாலன், சங்கீதா கபிலன், கயல்விழி கபிலன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், ஜாகீர் உசேன், நாட்டிய நாடகக் கலைஞர் வசந்தா வைகுந்த, நாடக நடிகை கே.என்.ஆர்.ராஜாமணி, நாடக ஆசிரியர் மு.ராமசாமி, நாடகத் தயாரிப்பாளர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, நாடக அரங்க அமைப்பாளர் வி.ஒய்.தாஸ் உள்ளிட்ட 72 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் கருணாநிதி பேசியதாவது:

சங்கீத நாடக மன்றம் என்று அழைக்கப்பட்ட இந்த மன்றம், இயல், இசை, நாடக மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு - மாற்றிய காலத்திலிருந்து இதுவரையில் தமிழகத்திலே சிறந்து விளங்குகின்ற புலவர் பெருமக்களுக்கு, இசைப் பேரறிஞர்களுக்கு, மற்றும் கலையை தங்களுடைய ஆற்றலால், அறிவால் உயர்த்திக் கொண்டிருக்கின்ற ஆர்வலர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடமையை ஆற்றுவதற்காக ஆண்டு தோறும் இத்தகைய விழாவில் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்குகின்றோம்.

நான் இந்த மன்றத்தின் சார்பாக கலைமாமணி விருது பெற்றவன் தான். அந்த விருதை எனக்களித்து, அதற்கான மாலையை எனக்கு அணிவித்து, என்னுடைய அரும்பெரும் தலைவர் அண்ணா என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அப்படி அவர்கள் எனக்கு அதை வழங்கி, எனக்கு மாலையும் அணிவித்த போது, இதே மேடையில் ஒன்றைச் செய்தார். அந்த மாலையை எனக்கு அணிவிப்பது போல பாவனை செய்து, நான் தலை குனிந்து அதை பெற்றுக் கொள்ள முற்பட்ட நேரத்தில், அவரே தன்னுடைய கழுத்தில் அந்த மாலையைப் போட்டுக் கொண்டார். அதனை அவர் வேடிக்கையாக அல்ல, பாச உணர்வோடு அவர் செய்ததை, அந்த மாமன்றத்திலே வீற்றிருந்த அனைவரும் உணர்ந்து கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தாயின் முத்தம் போன்றது கலைமாமணி!

கலைமாமணி விருது என்பது ஒரு வகையிலே மிகச் சிறந்து விளங்குவதற்குக் காரணம், இது உலக விருது பெற்றாலும், தேச விருது பெற்றாலும் அவைகளையெல்லாம் விடச் சிறந்தது என்பதற்கு என்ன காரணமென்றால், தேச விருது, உலக விருது இவைகள் எல்லாம் நமக்கு ஆசி வழங்கி, பாராட்டு வழங்கி அளிக்கப்படுகின்ற விருதுகள். அத்தகைய பெருமைகளை நமக்குத் தரக்கூடியவை.

கலைமாமணி விருது, தமிழக அரசின் சார்பில் தரப்படுவது, தாயின் முத்தத்திற்கு சமமானது. அத்தகைய தாயின் முத்தத்தைப் பெற்ற சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் விருந்தினர்தான்!

இறையன்பு பேசும்போது, தமிழக ஆளுநர் அவர்களே என்று விளித்து விட்டு, என்னை விளிக்கும் போது சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்ற கலைஞர் அவர்களே என்று அழைத்தார். நான் சிறப்பு விருந்தினராம்! அவர் சொல்கிறார், பாருங்கள்.

விருந்தினர் என்றால் வந்துவிட்டு சென்று விடுபவர்கள். உண்மைதான். எந்த அரசில் இருக்கின்ற அமைச்சர்களானாலும், அதிகாரிகளானாலும் - அதிகாரிகள் நிரந்தரமாக இருப்பார்கள், எங்களைப் போன்ற அமைச்சர்கள் விருந்தினர்கள்தான். விருந்தை அருந்திவிட்டு செல்கின்றவர்கள், விருந்தை மற்றவர்களுக்கு அளித்துவிட்டு செல்பவர்கள் என்பதில், விருந்தை அருந்திவிட்டுச் செல்பவர்கள் வரிசையில் சில பேர் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள். நாங்கள் விருந்து அளிப்பவர்களாக கடந்த பத்து, பதினைந்து ஆண்டு காலமாக தமிழ்நாட்டிலே எங்கள் பணியை ஆற்றி வருகிறோம்.

அந்தப் பணியிலே ஒன்று தான் கலைப்பணி. கலைப்பணியை ஆற்றுவதில் நான் மிகுந்த அக்கறை உடையவன். அதனால் தான் கலைவாணர் அரங்கம் இங்கே உருவாயிற்று. இந்த இடத்திற்கு இந்த மண்டபத்திற்கு தொடக்க காலத்திலே 'சில்ரன்ஸ் தியேட்டர்'- பாலர் அரங்கம் என்று தான் பெயர். இந்த இடத்திலே தான் சட்டசபையே ஒரு காலத்தில் நடைபெற்றது.

பாலர் அரங்கத்திலே சட்டசபை நடந்த காரணத்தால் தான் - இப்போது சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பாலர்களைப் போல சிலர் நடந்து கொள்கின்ற நிலைமைகளையெல்லாம் பார்க்கின்றோம். பாலர் அரங்கத்தின் பெயரை மாற்றி இதை கலைவாணர் அரங்கமாக ஆக்கிய அந்த வாய்ப்பு நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் எனக்கு கிட்டியது.

இந்த அரங்கின் கடைசி நிகழ்ச்சி!

கலைவாணர் அரங்கம் இங்கே மாத்திரமல்ல, நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதே, திருக்குற்றாலத்திலே ஒரு மண்டபத்திற்கு இதைப் போன்ற ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறுகின்ற மன்றத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று தான் பெயர் வைத்தேன்.

காரணம் கலைவாணர் மீது எனக்கு அன்பு, பாசம், மரியாதை, நன்றி இத்தனையும் உண்டு. அதனால் தான் கலைவாணர் அரங்கம் என்று திருக்குற்றாலத்திலே வைத்த பெயரைத் தொடர்ந்து இங்கேயும் பாலர் அரங்கத்தை, கலைவாணர் அரங்கம் என்று மாற்றியமைத்து, கட்டிடக் கலையிலே பல மாறுதல்களைச் செய்து இன்று அந்த அரங்கத்திலே நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கிறீர்கள்.

இந்த மேடைக்கு என்னை அமைச்சர் பரிதி இளம்வழுதி அழைத்து வந்த நேரத்திலே சொன்னார் - கலைவாணர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சியோடு அடுத்த நிகழ்ச்சிகள் இப்போது நடைபெற இயலாது என்றார். அது ஏன் என்பது எனக்குத் தெரியும், அவருக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

விதான் சவுதாவை விட சிறந்ததாக...

இந்த வளாகத்தில் - ஓமந்தூரார் வளாகத்தில் நம்முடைய தமிழகச் சட்டப் பேரவைக்கான பெரியதோர் கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது கர்நாடகத்தில் பெங்களூரிலே இருக்கின்ற விதான் சவுதாவை விட பெரிது. அதைவிட அழகானது. இன்னும் சொல்லப்போனால், பலரும் இங்கே வந்து பார்த்துவிட்டு, இந்தியாவிலேயே மிகமிகச் சிறப்புடைய கட்டிடமாக இது விளங்கும் என்று கூறிச் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டிடத்தை ஓமந்தூரார் வளாகத்திலேயே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஓமந்தூரார் வளாகம் என்பதே கூட நான் வைத்த பெயர்தான். நம்முடைய நாட்டில் சுதந்திரம் வந்த பிறகு முதல் முதல்-அமைச்சராக தமிழகத்திலே, சென்னை ராஜ்ஜியத்திலே பொறுப்பேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் எந்த அளவுக்கு தமிழர்களை நேசித்தார், எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுடைய கொள்கைகளுக்காக, முன்னேற்றத்துக்காக பாடுபட்டார் என்பதெல்லாம், பெரியாருக்கு, அண்ணாவுக்கு தெரியும், எனக்கும் தெரியும்.

அதனால்தான் அப்போது எதிர்தரப்பினர் சில பேர் அவர் மீது கொண்ட காழ்ப்பின் காரணமாக அவரும் காங்கிரஸ்காரராக இருந்துங்கூட, அவரை 'தாடியில்லாத ஈ.வெ.ராமசாமி' என்று அன்றைக்கு வர்ணித்தார்கள். அந்த அளவுக்கு சமுதாய சீர்திருத்தங்களை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் செய்தார்.

அதனால் அவருடைய பெயரால் எதுவும் இல்லையே, முதன்முதலாக முதல்-அமைச்சராக வந்தவர் ஆயிற்றே என்பதற்காகத்தான் இந்த வளாகத்துக்கே ஓமந்தூரார் வளாகம் என்று நான் பெயர் சூட்டி, அந்த வளாகத்திலேயே சட்டசபை இருக்கட்டும் என்று இப்போது புதிதாக அமையவிருக்கின்ற பிரமாண்டமான சட்டமன்றம் கூட ஓமந்தூரார் வளாகத்துக்குள்ளேதான் அமைகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூர், மலேசியாவில் இருப்பதைப் போல!

அதைப் போலவே கலைவாணர் அரங்கம் மலேசியாவிலேயே, சிங்கப்பூரிலே, வெளிநாடுகளிலே இருக்கின்ற அரங்கங்களை போல அவ்வளவு விசாலமாக, பெரிதாக, பலமடங்கு இங்கே அமர்ந்திருக்கின்ற மக்கள் கூட்டத்தை விட அதிகக் கூட்டம் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை சுவைக்கக்கூடிய வகையில் அத்தகைய மண்டபம் அமைய வேண்டுமென்பதற்காக கலைவாணர் அரங்கத்தையும் நாம் மாற்றியமைத்து பெரிய அளவில் உலகம் போற்றுகின்ற ஒரு பகுதியாக, ஒரு மன்றமாக ஆக்கவிருக்கிறோம்.

அதற்காக பழுதுபார்க்கின்ற வேலைகள் தொடங்கும்போது, ஆகா கலைவாணவர் அரங்கத்தின் சுவரை இடிக்கிறார்களே, படிகளை இடிக்கிறார்களே என்று யாரும் கருதாமல், இடிப்பது மேலும் மேலும் இதை விரிவாக்குவதற்காகத்தான் என்ற அந்த எண்ணத்தோடு இதைப் பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

உடல்நிலையை பொருட்படுத்தாமல்

இந்த அரங்கத்திலே எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன, எத்தனையோ விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன, எத்தனையோ அரசியல் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இடையில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா அவருடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல்-என்னைப் போல இன்றைக்கு வந்திருப்பது, நம்முடைய நன்றிக்குரிய, நாம் பாராட்டத்தக்க, நாம் போற்றத்தக்க செய்தியாகும்.

அவருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு - இந்த விருதுகளையெல்லாம் தெரிவு செய்து, அவைகளை வழங்குகின்ற முயற்சியை மேற்கொண்டுள்ள இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் ராம.நாராயணனுக்கும், கவிஞர் இளையபாரதிக்கும், இதற்காக ஆவண செய்த இறையன்புக்கும் நன்றி.." என்றார்.

இவர்களில் பரதநாட்டிய கலைஞர் ஸ்வேதா கோபாலன், நடிகைகள் நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ஷோபனா, சரோஜாதேவி, இயக்குநர் சேரன் ஆகியோர் விழாவுக்கு வரவில்லை.

விருது பெற்ற கலைஞர்களுக்கு பொற்பதக்கமும், கலைமாமணி விருது பெற்று வயது முதிர்ந்த நலிந்த கலைஞர்கள் நாடக நடிகர் டி.என்.கிருஷ்ணன், இசை நாடகப் பாடலாசிரியர் என்.எஸ்.வரதராசன், புரவியாட்டக் கலைஞர் டி.சி.சுந்திரமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம் பொற்கிழியும் வழங்கினார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more