நடிகை ஜெயசுதா கைதாகி விடுதலை!

ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ஜெயசுதா களமிறங்கியுள்ளார். இந்தத் தொகுதியில் தேர்தல்கள் முடிந்துவிட்டன.
ஆனால் தேர்தலுக்கு முன் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்ததாலா, அவரை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த 3ம் தேதி நாமாலகுண்டு செளரஸ்தா என்னும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் ஜெயசுதா. அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் இவர் நடந்து கொண்டாராம்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதை விதாரித்த போலீசார், மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஜெயசுதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போலீசார் அனுமதி பெறாமலேயே கடந்த 14-ம் தேதி உஸ்மானியாவிலிருந்து சாலை தேர்தல் பிரச்சாரம் செய்ததும் புகாராகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெயசுதா கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











