'ராசியாகி விட்ட' ரஜினி - ரஹ்மான்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன், சுல்தான் தி வாரியர் இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். ஆனாலும் அவர் மீது ரஜினிக்கு ஒரு வருத்தம் உண்டு. மகள் சௌந்தர்யா ரஜினி தயாரித்து இயக்கும் சுல்தான் படத்துக்கு இன்னும் முழுமையான இசையைத் தரவில்லையே என்பதுதான் அது.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அவற்றில் இரண்டு மட்டும்தான் தயாராகியுள்ளதாம். மற்ற பாடல்களுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை.
இடையில் சுல்தான் படப்பிடிப்பும் நின்று போயிருந்ததால் ரஜினியும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் சுல்தான் படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை அம்சங்களும் குறைவின்றி சேர்க்கப்பட்டுள்ளனவாம் படத்தில்.
எனவே படத்துக்கு ஒரு அறிமுகப் பாடல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை ரஹ்மானிடம் தெரிவிக்க, இந்த முறை தானே நேரில் போக முடிவு செய்த ரஜினி, மகள் சௌந்தர்யாவை அழைத்துக் கொண்டு நேரே ரஹ்மான் வீட்டுக்குப் போனார்.
அவரிடம் சில நிமிடங்கள் ரஜினி மனம் விட்டுப் பேச, ரஹ்மானும் உடனே இசையை முடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டாராம். அந்த அறிமுகப் பாடலையும் அட்டகாசமாக போட்டுத் தருவதாக அவர் கூற, தடங்கல் நீங்கிய சந்தோஷத்துடன் வீடு திரும்பியுள்ளார் ரஜினி.


Click it and Unblock the Notifications











