twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!

    By Shankar
    |

    இந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக பெரிய லாபம் இல்லாவிட்டாலும், தரமான படைப்புகள் என்ற முறையில் பார்த்தால் சில படங்கள் வெளியாகியுள்ளது ஆறுதலாக அமைந்துள்ளது. சொல்லப் போனால் இதுதான் உண்மையான லாபம்!

    படைப்பின் தரத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்தப் படங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன.

    தரமான படங்களைத் தந்திருந்தாலும், வணிகரீதியாக வெற்றி கிட்டாதபோது, இந்தப் படங்களை எடுத்த இயக்குநர்களின் நிலைதான் கேள்விக்குரியதாகிவிடுகிறது. வேங்கை, ஒஸ்தி போன்ற குப்பைப் படங்களுக்கும் பெரிய ஓபனிங் கொடுத்து காப்பாற்றிவிடும் ரசிகர்கள், இந்த மாதிரி தரமான படங்களை ஆதரிக்காமல் போவது, நல்ல படைப்பாளிகளை நம்பிக்கையிழக்க வைத்துவிடுகிறது. 2012லாவது இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும்.

    சரி... எவை அந்த தரமான படங்கள் என்பதற்கான மிகச் சிறிய பட்டியல் இது:

    1.வெங்காயம்

    யாரப்பா இந்த துணிச்சலான இயக்குநர்? என்று கேட்க வைத்த படம் வெங்காயம். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் மூட நம்பிக்கையின் உச்சி மண்டையில் சம்மட்டியால் அடிப்பது மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.

    மனிதாபிமானம் என்பதே மரத்துப்போன சமுதாயம் இது என்பதை ஒரு தெருக்கூத்துக் கலைஞரின் சோகத்தை வைத்து சொல்லியிருந்தார் புதிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். உயிருக்குப் போராடும் தன் மகனைக் காக்க, புதுவை வீதிகளில் பணம் கேட்டு அலையும் அந்த தெருக்கூத்துக் கலைஞன், தான் சொல்வது உண்மை என்பதை நம்பவைக்க, கூத்து கட்டிப் பாடி அழும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருந்த பலரது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்ததைப் பார்க்க முடிந்தது.

    பூசாரிகள், சோதிடர்கள், மூட நம்பிக்கைகளால் முடை நாற்றமடித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை முடிந்தவரை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகத் தரமான படைப்பு என்ற கவுரவத்தை இந்த எளிய படைப்புக்குத் தருகிறோம்!

    2. வாகை சூட வா

    களவாணி என்ற கலகலப்பான கமர்ஷியல் வெற்றியைத் தந்த இயக்குநர் சற்குணம், தனது சமூக அக்கறையை வெளிக்காட்ட எடுத்த இரண்டாவது படம் வாகை சூட வா. நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்கள், சண்டை என்ற பெயரில் குரளி வித்தைகள், அறுவறுக்க வைக்கும் பாடல்-நடனங்கள் என எந்த வழக்கமான சினிமாத்தனமும் இல்லாமல் வந்த அழகான படம் இது.

    அது என்னமோ தெரியவில்லை, தரமும் அழகியலும் கொண்ட படங்களை விருதுக்கு என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள். அப்படி ஒரு நிலையை இந்தப் படத்துக்கும் தந்துவிட்டார்கள்.

    கல்விக் கண் திறந்த காமராஜரின் பணிக்கு, கர்ம சிரத்தையோடு தோள்கொடுத்த உண்மையான ஆசிரியப் பெருமகன்களுக்கு நன்றிக் காணிக்கையாக வந்த இந்தப் படம் தமிழ் சினிமா மகுடத்தில் இன்னும் ஒரு அழகிய சிறகு!

    3. அழகர்சாமியின் குதிரை

    மகேந்திரனுக்குப் பிறகு எழுத்தாளரின் கதையை அதே வாசத்துடன் அழகர்சாமியின் குதிரையாகத் தந்த பெருமை சுசீந்திரனுக்கு சேரும். எண்பதுகளின் பின்னணியில் வந்த எளிமையான அழகான படம் அழகர்சாமியின் குதிரை.

    இளையராஜாவின் இசை, அப்புக்குட்டியின் நடிப்பு, சுசீந்திரனின் படமாக்கம் போன்றவற்றுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் இது.

    4. எங்கேயும் எப்போதும்

    ஒரு படத்துக்கு வசூலும் பாராட்டும் ஒரு சேரக் கிடைப்பது அபூர்வம். அப்படி கிடைக்கப்பெற்ற படம் புதிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வந்த எங்கேயும் எப்போதும்.

    இந்தக் கால காதலை, வித்தியாசமான இரு பின்னணியில் அழகாக சொல்லியிருந்தார். போக்குவரத்து போலீசாரால் கூட ஏற்படுத்த முடியாத விழிப்புணர்வை ஒரு சினிமா படைப்பாளி செய்திருந்தார்.

    இப்போதெல்லாம், வெளியூர் பஸ்களில் ஏறும்போதே, 'பார்த்து சார்' என ஓட்டுநர்களை பயணிகள் சினேகத்துடன் உஷார்படுத்துவது இந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றி.

    5. தென்மேற்கு பருவக்காற்று

    கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இந்தப் படம் தமிழுக்கு பெருமை சேர்த்த படங்களுள் முக்கிய இடம் பெறுகிறது. சங்கத் தமிழ் சித்தரித்த வீரமும் ஈரமும் மிக்க தாயை கண்முன் நிறுத்திய படம் தென்மேற்குப் பருவக் காற்று.

    ஒரு தாய் என்பவள் வெறுமனே சமயைல் செய்யும், டப்பா சீரியல்களுக்காக கண்ணீர் விடும் எந்திரம் என்பது போல தமிழ் சினிமா காலகாலமாக சித்தரித்ததை உடைத்தெரிந்த படம் இது.

    தேசிய விருதுகளையெல்லாம் தாண்டி, இன்று ஒரு நம்பிக்கை தரும் படைப்பாளியாக சீனு ராமசாமியை உயர்த்தியுள்ளது தென்மேற்குப் பருவக்காற்று.

    6. வர்ணம்

    இந்தப் படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதன் தரம், படமாக்கம் சற்று முன்னே பின்னே இருந்தாலும், சொல்ல வந்த கருத்து நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

    ஊட்டி மலைக்கிராமங்களில் நிலவும் சாதிய ஒடுக்கு முறையை நேரடியாகவே சொன்ன படம் இது. தன்னை எதிர்த்துப் பேசும் நபர்களை, தான் சொல்லும் அடிமாட்டு விலைக்கு விளைச்சலை தன்னிடம் விற்க மறுக்கும் பலமற்ற விவசாயிகளை, ஆதிக்க சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சித்தரித்திருந்த விதம், மனித இனத்தின் மீதே வெறுப்பை உமிழ வைத்தது.

    சம்பத், மோனிகா போன்றவர்கள் வெகு இயல்பாக நடித்திருந்தார்கள். எஸ்எம் ராஜு என்பவர் இயக்கியிருந்தார்.

    English summary
    Here are few top class Tamil movies released in 2011. Vengayam, directed by Sangagiri Rajkumar is got the top place among those films. Vaagai Sooda Va, Azhagarsamiyin Kuthirai, Engeyum Eppothum, Them\nmerku Paruvakatru and Varnam also got a place in this list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X