சீமான், அமீர் ரிலீஸ்: வரவேற்க திரண்ட திரையுலகம்!

அவர்களை இயக்குநர்கள் பாரதிராஜா, ராம நாராயணன் தலைமையில் திரையுலகினர் மதுரை மத்திய சிறை வாசலில் வரவேற்றனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் கடந்த 19-ந்தேதி தமிழ்திரை உலகம் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் விரைவு விசாரணை நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து டைரக்டர்கள் சீமான், அமீரை ஜாமீனில் எடுப்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்க இயக்குநர் மனோஜ்குமார் மற்றும் வக்கீல்கள் ராமேசுவரம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு நீதிபதி விடுப்பில் இருப்பதாகவும் ராமநாதபுரம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ராமேசுவரம் கோர்ட்டில் நடைமுறை பணிகளை முடித்துக்கொண்டு அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்தனர். நீதிபதி தங்கவேல் முன்னிலையில் சீமான், அமீர் சார்பில் ஜாமீன்தாரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சீமான், அமீரின் பாஸ்போர்ட்டுகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் இரு நபர் ஜாமீனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தங்கவேல் ராமநாதபுரம் விரைவு விசாரணை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி 2 பேரையும் ஜாமீனில் விடுவிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.
இந்த உத்தரவு மதுரை மத்திய சிறையில் இன்று ஒப்படைக்கப்பட்டது. சிறைத் துறை நடைமுறைகள் முடிந்ததும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இருவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்தனர் சிறை அதிகாரிகள்.
இயக்குநர்கள் பாரதிராஜா, ராம.நாராயணன், சேரன், நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், பேரரசு உள்பட 150-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இன்று மதுரையில் திரண்டு அமீர், சீமானை வரவேற்றனர்.
விடுதலைக்குப் பின்னர் அமீர் மதுரையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தும், சீமான் அவரது சொந்த ஊரான இளையான்குடியில் தங்கியும் தினமும் மதுரை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திடுவார்கள்.


Click it and Unblock the Notifications











