ஷில்பாவின் 'ஸ்பா'-அழகி முகம் அலங்கோலம்!!

டேராடூனைச் சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல் அழகியின் முகத்தை அலங்கோலமாக்கியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் அயோசிஸ் அழகு நிலையம்.
இதையடுத்து ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மாடல் அழகி.
பாதிக்கப்பட்ட அந்த அழகியின் பெயர் கெளரி கான். டேராடூனைச் சேர்ந்தவர். இளம் நடிகை மற்றும் மாடல் அழகி.
22 வயதான இவர் தி லிஜென்ட் ஆப் மாயாவதி என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இவர் மும்பையில் உள்ள ஷில்பா ஷெட்டி மற்றும் சந்திரகிரன் கெளர் ஆகியோர் இணைந்து நடத்தும் அயோசிஸ் அழகு நிலையத்திற்குச் சென்று முக அழகை அதிகரிக்கும் பிக்மென்டேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
ஆனால் அழகு கூடுவதற்குப் பதில் முகமே அலங்கோலமாகி விட்டது. தோல் கருத்து, சுருங்கி, கரும்புள்ளிகள் ஏற்பட்டு முகமே கோரமாகி விட்டது.
இதனால் அதிர்ச்சியுற்ற கெளரி கானுக்கு மாடல் வாய்ப்புகள் பறிபோயின. சினிமாவிலும் வாய்ப்புகள் வராமல் போய் விட்டது. எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து ஷில்பா ஷெட்டி, அவரது பார்ட்னர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் கெளரி கான். மேலும் ஓஷிவாரா காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். ரூ. 17 லட்சம் இழப்பீடும் கோரியுள்ளார்.
இந்த சிகிச்சைக்காக ரூ. 38 ஆயிரம் பணத்தை செலவழித்துள்ளாராம் கெளரி கான்.
இதுகுறித்து அயோசிஸ் நிறுவன வக்கீல்கள் கூறுகையில், சிகிச்சைக்குப் பின்னர் கவனமாக இருக்கவில்லை கெளரி கான். இதனால்தான் அவருக்கு இப்படியாகி விட்டது. எங்கள் மீது தவறில்லை என்கின்றனர்.
இதுகுறித்து கெளரி கான் கூறுகையில், எனது முக அழகு பறிபோன பின்னர் நான் அந்த ஸ்பாவை அணுகி எனது பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் முடியாது என்று கூறி விட்டனர்.
இதையடுத்து நான், ஷில்பா ஷெட்டி இந்த ஸ்பாவை பிரபலப்படுத்தி பேசி வருகிறாரே என்று கேட்டதற்கு எல்லோரும் ஷில்பா ஷெட்டி ஆகி விட முடியாது என்றார்.
நான் ஒரு மாடல். எனது எதிர்காலமே எனது அழகில்தான் உள்ளது. ஆனால் இப்பபடி பண்ணி விட்டார்கள். நான் ஷில்பா ஷெட்டி ஆக விரும்பவில்லை. ஆனால் எனது முகத்தை அப்படியே திரும்பித் தாருங்கள். எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன் என்றார் கெளரி கான்.


Click it and Unblock the Notifications











