கலைப்புலியின் 'பலே' பிரஸ்மீட்!

கலைப்புலி தாணு எதிலும் வித்தியாசமாக இருப்பார். படம் சரியில்லாவிட்டாலும் கூட அவரது விளம்பர உத்திகள், அப்படத்தை ஹிட் ஆக்கி விடும்.
அப்படிப்பட்ட கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம்தான் கந்தசாமி. படத்தின் தொடக்க விழாவையே பிரமாண்டமாக நடத்தி அசத்தியவர் கலைப்புலி தாணு.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டையும் சற்று வித்தியாசமாக ஏற்பாடு செய்துள்ளார். வழக்கமாக ஆடியோ வெளியீடு என்றால் பத்திரிகை அடித்து அனைத்து பத்திரைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆடியோ வெளியீடுதான் விழாவாக நடைபெறும்.
ஆனால் ஆடியோ வெளியீடு எப்போது என்பதை அறிவிக்கவே ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டியுள்ளார் கலைப்புலி தாணு.
இன்று மாலை ஸ்வர்ண சக்தி அபிராமி தியேட்டரில் இந்த பிரஸ் மீட் நடக்கிறது. இதில், கலைப்புலி தாணுவ, இயக்குநர் சுசி கணேசன், நாயகன் விக்ரம், நாயகி ஷ்ரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
படத்தின் புதிய டிரெய்லர் அங்கு போட்டுக் காட்டப்படுகிறது. மேலும் சீன பாணியில் படமாக்கப்பட்டுள்ள ஒரு பாடல் காட்சியையும் பத்திரிக்கையாளர்களுக்காக போட்டுக் காட்டவுள்ளனராம்.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட பாடல்கள் அனைத்தையும் விக்ரமே பாடியுள்ளார்.
சோனி மியூசிக் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளனராம்.
இப்படத்தின் சென்னை உரிமையை ரூ. 4 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் அபிராமி ராமநாதன்.
மே மாதம் மத்தியில் கந்தசாமி தியேட்டர்களுக்கு வருகிறார். கோடை விடுமுறை காலத்தை மக்கள் கந்தசாமியுடன் கொண்டாடட்டும் என்பதால் மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
சீக்கிரம் வாங்க சாமியோவ்...!


Click it and Unblock the Notifications











