ரசிகர்கள் தொந்தரவால் தேர்வு எழுத முடியாமல் வெளியேறிய சௌந்தர்யா!

ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்குச் சௌந்தர்யா சென்றார்.
அவர் தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். சௌந்தர்யாவைப் பார்க்க அனைவரும் முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து விடுபட்டு தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.
அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும், தங்களது வேலையை விட்டுவிட்டு சௌந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னல் மற்றும் வாயிலில் நின்று பெரும் கூட்டம் அவரை வேடிக்கைப் பார்த்தது. இதனால் சௌந்தர்யா பெரும் சங்கடமடைந்தார். அவரால் தேர்வு எழுத முடியவில்லை.
எனவே அவர் கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் கல்லூரி முதல்வர் மறுத்தார்.
பிரபலங்கள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படுவது ஏற்கெனவே உள்ள வழக்கம்தான் என்பதை உதாரணங்களுடன் சுட்டிக் காட்டி முதல்வரிடம் வாதாடினார் சௌந்தர்யா.
ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார் சௌந்தர்யா!


Click it and Unblock the Notifications











