'வானமகள் நாணுகிறாள், வேறு உடை...' கவிஞர் வைரமுத்துவின் பொன்மாலை பொழுது பாடலுக்கு 40 வருடம்!
சென்னை: வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது பாடல் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகியுள்ளது.
கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் வைரமுத்து ஆனது, பொன்மாலைப் பொழுது பாடல் மூலம்தான். இதுதான் அவர் எழுதிய முதல் திரைப்பாடல்.
பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்துக்காக, இளையராஜா இசையில் அந்தப் பாடலை எழுதினார் வைரமுத்து.

சினிமாவின் பெருங்கதவு
கவிதைகளோடும் கனவுகளோடும் இருந்த வைரமுத்துவுக்கு, இந்த ஒற்றைப் பாடல், தமிழ் சினிமாவின் பெருங்கதவைத் திறந்து வைக்கும் என்பது அப்போது தெரிந்திருக்குமா எனத் தெரியாது. ஆனால், பாடல்களின் அத்தனை உச்சத்தையும் இப்போது அவர் தொட்டுவிட்டார் என்கிறார்கள், அவரது ரசிகர்கள். 80 மற்றும் 90 களில் அவர் பாடல் வரிகளை ரசனையோடு பாடி காதலித்தவர்கள் ஏராளாம்.

நாற்பது ஆண்டுகள்
அது இப்போதுவரை தொடர்கிறது என்பது அவரது அதிர்ஷ்டமா, தமிழுக்கான அதிர்ஷ்டமா தெரியவில்லை என்கிறார்கள், ரசிகர்கள். அவரது அந்தப் 'பொன்மாலைப் பொழுது' இடம்பெற்ற 'நிழல்கள்' படம், வெளியான ஆண்டு 1980! இந்தப் பாடல் உருவானது மார்ச் 10, 1980. இந்தப் பாடல் வெளியாகி இப்போது நாற்பது ஆண்டுகள் ஆகிறது. வசூலில் 'நிழல்கள்' மாயமாகி விட்டாலும் அந்தப் பாடல், ரசிகர்களின் மனதில் அப்படியே தங்கி இருக்கிறது இன்னும்!

ஏழு முறை விருது
இந்தப் பாடலை அடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் ஆகிவிட்ட வைரமுத்துவின் வரிகளில், உதடுகள் இன்னும் உச்சரிக்கும் பாடல்கள் ஏராளம். சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றிருக்கிறார் அவர். இந்த விருதை இத்தனை முறை வாங்கிய ஒரே பாடலாசிரியரும் அவர்தான் என்கிறார்கள்.

உருவான விதம்
காதல், சோகம், புரட்சி, துள்ளல் என அவர் வரிகளில் வெளிவராத வகைகளும் வார்த்தைகளும் இல்லை. அத்தனையும் அற்புத வரிகள் என்கிறார்கள் கவிஞர்கள். 'பொன்மாலைப் பொழுது' பாடல் உருவான விதம் பற்றி அவர் தனது 'இதுவரை நான்' புத்தகத்தில் விரிவாகவும் அழகாகவும் கவிதையாக எழுதி இருப்பார், வைரமுத்து. பல மேடைகளிலும் அதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

மறக்க முடியுமா?
கடந்த சில வருடங்களுக்கு முன் அவர் ஒரு விழாவில் பேசும்போது இப்படி சொல்லி இருந்தார். 'எல்லோருக்கும் முதல் மழை, முதல் முத்தத்தை மறக்க முடியுமா?. அப்படித்தான் எனக்கும், எனது முதல் பாடலை மறக்க முடியாது. அந்த நேரம் என் மனைவியை முதல் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, டைரக்டர் பாரதிராஜாவுடன், இசை அமைப்பாளர் இளையராஜாவை பார்க்கச் சென்றேன்.

பிரசவ அனுபவம்
எனக்கும் அது பிரசவ அனுபவம்தான். அது அட்லாண்டிக் ஓட்டல். அறை எண் 410. புது பாடலாசிரியர் என்பதால் இளையராஜா மெட்டுகளை எழுதி தந்து, பாடலை எழுதி கொண்டுவா என்றார். உடனே, இந்த மெட்டுக்கு எனது மனதில் உள்ள பாடல் வரிகளைச் சொல்லவா? என்றேன். 'இது ஒரு பொன் மாலை பொழுது..' என்ற பாடலைப் பாடிக் காட்டினேன். இளையராஜா, என் போன் நம்பரை வாங்கிக் கொள்ளச் சொன்னார் உதவியாளரிடம்.

அவருக்கு போதிமரம்
வெளியே வந்த பாரதிராஜா என்னிடம், 'இவன் யாரிடமும் போன் நம்பர் வாங்க சொல்லமாட்டான். முதல் முறையா உன்னிடம் வாங்க சொல்கிறான், கொடு' என்றார். கொடுத்தேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பாடல் எழுதி இப்போது 40 வருடம் ஆகிறது. வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் இளமையோடும் உயிர்ப்போடும் இருக்கிறது, அந்த பொன்மாலைப் பொழுது.

அனுபவ ஊற்று
வரிகள் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது அனுபவ ஊற்று என்பதை வைரமுத்துவின் பல பாடல் வரிகள், நமக்கு உணர்த்திருக்கிறது பலமுறை. அவரிடம் கடலென பாடல்களும் வரிகளும் இருக்கிறது என்பதை, அடையாளம் காட்டியது அந்த முதல் பாடல்தான். அது இன்னும் தொடர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏன் என்றால், வானம் அவருக்கொரு போதிமரம், நாளும் அவருக்கது சேதி தரும்!


Click it and Unblock the Notifications











