எனது படங்கள் குறித்து ஒபாமாவுக்குத் தெரிந்திருக்கிறது-ஆமிர் பெருமிதம்

ஒபாமா தம்பதிக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்துக் கெளரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பிரபலங்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நடிகர் ஆமிர்கான்.
விருந்துக்குப் போன ஆமிர்கானுக்கு, ஒபாமா மூலம் பெரும் சந்தோஷம் கிடைத்ததாம். அதாவது ஒபாமா தம்பதியினர் ஆமிர்கானையும், அவரது படங்களையும் பாராட்டினார்களாம். இதனால் புளகாங்கிதமடைந்துள்ளார் ஆமிர்கான்.
இதுகுறித்து ஆமிர் கூறுகையில், எனது படங்கள் குறித்தும், எனது பணிகள் குறித்தும் ஒபாமாவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இந்த விருந்தின் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டபல்வேறு பெரும் தலைவர்களை சந்திக்க முடிந்தது. நான் மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன். அவர் என்னை விருந்துக்கு அழைத்ததை பெரும் கெளரவமாக கருதுகிறேன் என்றார் ஆமிர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், விருந்தின்போது அதிபரின் மனைவி மிஷல் என்னிடம் வந்து, உங்களது ரங் தே பசந்தி படப் பாடலுக்காக தான் மும்பையில் நடனமாடியதாக சிரித்தபடி கூறியபோது மெய் சிலிர்த்துப் போனேன் என்றார் ஆமிர்கான்.
பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அவரது மனைவியும், நடிகையுமான ஷபானா ஆஸ்மி ஆகியோரும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்றோரையும் கூட காங்கிரஸ் அரசு விருந்துக்கு அழைத்திருக்கலாமே...!


Click it and Unblock the Notifications











