சினிமாவையே மூச்சாக கொண்டு செயல்படும் தனுஷ்.. பிறந்தநாள்ல கூட வேலையில் பிசி!
சென்னை : நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான இவர், தன்னை படத்திற்கு படம் மெருகேற்றிக் கொண்டுள்ளார்.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடித்துவரும் தனுஷ் கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் தனது இரண்டாவது படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தி க்ரே மேன் படம், அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியானது.

தி க்ரே மேன் படம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் தனுஷிற்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பிரமோஷனின்போதே, தங்களது அடுத்தப் படத்திலும் தனுஷ் இணையவுள்ளதாக ரூசோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் இவர் படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

மோசமான விமர்சனங்கள்
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானபோது, தன்னுடைய ஒல்லியான தோற்றத்திற்காக அதிகமான விமர்சனங்களை பெற்றிருந்தார் தனுஷ். மேலும் எண்ணெய் வழிந்த முகத்துடன் இவர் அந்த படத்தில் நடித்தபோது, இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துவிட்டதே என்ற விமர்சனங்களை அதிகமாக எதிர்கொண்டார்.

சிறப்பான நடிகராக மாற்றம்
தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்து, தன்னை சிறப்பான நடிகராக மாற்றிக் கொண்டுள்ளார். சமீபத்தில் தி க்ரே மேன் படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்ட தனுஷ், தன்னுடைய ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொண்டு மிகவும் ஸ்டைலாக காணப்பட்டார்.

டோலிவுட்டில் என்ட்ரி
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள தனுஷ், வாத்தி படம் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் பாலிவுட்டிலும் தனுஷ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் இவரது நடிப்பில் அடுத்த மாதம் 18ம் தேதி திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது.

பிறந்தநாளிலும் வேலையில் பிசி
தொடர்ந்து அவரது வாத்தி, நானே வருவேன் படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி அவர் எந்தவிதமான கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் அவரது வேலையில் பிசியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்கள்
அவரது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் அவர் இன்றைய தினம் பிசியாகியுள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஸ்டைலான தனுஷை பார்க்க முடிந்தது.

குவியும் வாழ்த்துக்கள்
இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் தனுஷிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீசாகவுள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு அசுரன் தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்தில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத பள்ளி மாணவனாக தோன்றி நடித்தார் தனுஷ். தொடர்ந்து தன்னுடைய நடிப்பை மெருக்கேற்றிக் கொண்டு சிறப்பான நடிகராக சர்வதேச அளவில் தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். நடிப்பு அசுரனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

முதிர்ச்சியான நடிப்பு
சாதாரண கேரக்டரையும் தன்னுடைய நடிப்பால் சிறப்பாக மெருகேற்றும் நடிகர்களில் தனுஷிற்கு சிறப்பான மற்றும் முக்கியமான இடம் காணப்படுகிறது. படத்திற்கு படம் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திவரும் தனுஷ், தன்னுடைய நடிப்பு மீதான காதலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்த பிறந்தநாளில் அவரது கனவுகள் அனைத்தும் நனவாக அவரது ரசிகர்களை போலவே நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











