அள்ளி அள்ளி கொடுத்த திரையுலக கர்ணன்.. ரசிகர்களின் ராஜகுமாரன் புனித் ராஜ்குமார்!
பெங்களூரு: கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். ரசிகர்கள் அவரை செல்லமாக அப்பு என்றும் அழைப்பார்கள். ரசிகர்களுக்கு மட்டும் அவர் செல்லப்பிள்ளை அல்ல திரை பிரபலங்களுக்கும் அவர் அப்படித்தான் இருந்தார். புனித்தின் சிரிப்பை பார்த்தால் கோபங்கள் மறந்த அன்பு ஊற்றாய் பெருகும். என்னப்பா இப்படி ஒரு மனிதரை இழந்துவிட்டோமே என்று கன்னட திரையுலகம் மட்டும் அல்ல ரசிகர்களும் ஏங்கி தவிக்கின்றனர். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். அவருக்காக இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களின் அப்பு: சிவராஜ்குமார் நடிகராக அறிமுகமாகி கன்னட ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்திருக்கிறார். லெஜண்ட் என்றும் வர்ணிக்கப்படுகிறார். ஆனால் புனித் ராஜ்குமார் ஆறு மாத கை குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தை நடித்த படங்களில் அறிமுகம் ஆகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே புனித் ராஜ்குமார் சுமார் 26 படங்களில் நடித்து முடித்துள்ளார். பெட்டா ஹூவு என்ற படத்திற்காக குழந்தை நட்சத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் அப்பு என்ற படத்தில் நடிகராக அறிமுகமனார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே புனித் ராஜ்குமாரை ரசிகர்கள் அப்பு என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

பேரன்பு: புனித் ராஜ்குமார் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷனை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார். திரையரங்கிற்கு சென்று தனித்தனியாக ரசிகர்களை சந்தித்து கட்டியணைத்து அன்பை பொழிவார். இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் தான் நான் இன்னும் நடிகனாக இருக்கிறேன். அவர்களது அன்பிற்காக எதையும் செய்யலாம் என அவரே தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை போன்று கன்னடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை புனித் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். அதில் ரசிகர்களுடன் சேர்ந்து பேசும் வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து அனைவரையும் நெகிழ வைத்தார்.

அப்பு மீது கோபத்தை விட அன்புதான் அதிகம். ஈகோ இல்லாத நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். சிவராஜ்குமார் நடித்த பஜ்ரங்கி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ் கலந்துகொண்டார். இதில், புனித்துடன் சேர்ந்து யஷ் நடனம் ஆடியிருப்பார். பின்பு பேசிய யஷ், என்னுடைய கல்லூரி நாட்களில், அப்புவின் நடனத்தை பார்த்து, சண்டை காட்சிகளை பார்த்து, இவரை மாதிரி நடனம் ஆட வேண்டும், இவரை மாதிரி சண்டை போட வேண்டும் என்று சினிமா இன்ஸ்டஸ்ரிக்கு வந்தேன் எனக் கூறினார். தமிழ் சினிமாவில் விஜய் போன்று கன்னட திரையுலகில் புனித்தின் நடனம் ரசிக்க வைக்கும்.
ரசிகர்களின் ராஜகுமாரன்: கன்னட சினிமா ரசிகர்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் புனித் ராஜ்குமார். படத்தின் போஸ்டரை பார்த்து கொண்டாடும் அளவில் மட்டும் இல்லாமல் இதயத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை பெற்றிருக்கிறார். இதுபோன்ற ரசிகர் படையைக் கொண்டிருக்க திரைப்படங்களைத் தாண்டியும் பலவகையில் மக்களை ஈர்த்துள்ளார். தன்னை பின்பற்றும் ரசிகர்களை சரியாக வழிநடத்தியும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் தனக்காக வைத்து கொள்ளாமல் 26 அனாதை இல்லங்கள் மற்றும் 16 முதியோர் இல்லங்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வந்துள்ளார்.
கன்னட வழியில் கல்வி கொடுக்கும் பள்ளிகளுக்கு உதவினார். கிட்டத்தட்ட 1800 மாணவர்களைப் படிக்க வைத்துள்ளார்.ஏழை மாணவர்களுக்காக 45 பள்ளிகளைக் கட்டிக்கொடுத்தார். புனித்தை போன்று அவரது ரசிகர்களும் சமூக சேவையை செய்து வருகின்றனர். இந்த கையில் கொடுப்பதை அந்த பக்கம் தெரியாமல் பார்த்துகொண்டார் புனித் ராஜ்குமார். அவர் செய்யும் உதவி அவரது குடும்பத்தினருக்கே தெரியாமல் இருந்தது தான் ஆச்சர்யம். சிவராஜ்குமாரே இதை தெரிவித்திருந்தார்.

கண்தானம்: புனித் தனது தந்தையை போன்று இறக்கும் போது கண்தானம் செய்துகொண்டார்.
பெரும்பாலும் கண்தானம் செய்த நபர் இறப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பார்கள். ஆனால், புனித்தின் சகோதரி மருத்துவர்களை அழைத்து கண் தானம் குறித்த தகவலை தெரிவித்தார். அதன் பின்பு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. புனித்தை போன்றே அவரது ரசிகர்கள் 70,000 பேர் கண்தானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு அப்பு ஆம்புலன்ஸ் என்ற இலவச சேவையை அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜூவும் தனது அறக்கட்டளை மூலம் ஒரு ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்தார். அதற்கு அப்பு எக்ஸ்பிரஸ் என பெயர் வைத்துள்ளனர்.
அறக்கட்டளை: புனித் ராஜ்குமார் தனது அம்மாவுடன் இணைந்து சக்திதாமா அறக்கட்டளை பணிகளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவிகளின் படிப்புக்கு உதவியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர், வன்முறையால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு தங்க இடமும், உணவும் அளித்து வேலை பயிற்சியும் இந்த அறக்கட்டளை மூலம்
உதவி செய்துள்ளார். இதன் மூலம் 4000 பெண்கள் புதுவாழ்வு பெற்றனர். ஒரு நடிகர் அவரது ரசிகர்களை எப்படி சரியான வழியில் நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக புனித் வாழ்ந்துள்ளார்.
புனித் ராஜ்குமார் சாலை: புனித்தின் சேவையை பாராட்டி கர்நாடக அரசு பெங்களூரு நகரின் மைசூர் - பன்னர்கட்டா சாலையில் 12 கி.மீ தொலைவுக்கான சாலையை ஸ்ரீ டாக்டர் புனித் ராஜ்குமார் ரோடு எனப் பெயரிட்டதுடன் அவருக்கு கர்நாடக ரத்னா விருதையும் வழங்கியது. போதும் உடற்பயிற்சி செய்து பிட்டாக இருப்பவர், 46 வயதில் உயிரிழந்த சோகம் இன்றும் கர்நாடக மக்களை விட்டு வைக்கவில்லை. பெங்களூர் நகரின் ஆட்டோக்கள், தெருக்கள் என 60 சதவிகித இடங்களில் புனித் ராஜ்குமாரின் பேனர்களை காணலாம். இறந்துவிட்டதாக தெரிவித்தாலும் இன்றும் ரசிகர்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
ரமணா படத்தில் விஜயகாந்த் மரணத்தை கண்டு பதறும் மக்களை போன்றே கர்நாடக ரசிகர்களும் ஒரு நாட்டின் தலைவனை இழந்து வாடுவது போல் பரிதவித்தனர். அந்த கண்ணீரில் இனி உங்களை காண முடியாது அப்பு என தெரிவித்தனர். அப்பு அப்பு என்ற வார்த்தைகள் பெங்களூரு நகர் முழுக்க ஒலித்தது. திரையில் வந்த நடிகனுக்காக இப்படியா என்பதை காட்டிலும் அவர் வாழும்போதே மாமன்னனாக இருந்துள்ளார் என்பதை காட்டுகிறது. கண்ணீராகவும், பாடலாகவும், கவிதை வரிகளாகவும் இன்று வரை ஒலித்துகொண்டு தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











