44 ஆண்டுகள்.. 167 படங்கள்.. 6க்கும் மேற்பட்ட மொழிகள்.. ஸ்டைலின் அடையாளம்.. முடிசூடா மன்னன் ரஜினி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பெங்களூரு போக்குவரத்துத்துறையில் நடத்துநராக பணியாற்றிய ரஜினிகாந்த்துக்கு அபூர்வராகங்கள் படத்தில் கேட்டை திறக்கும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் கதவை திறந்துவிட்டது.

ரஜினியாக மாறிய சிவாஜி
சிவாஜி ராவாக தமிழ் நாட்டிற்கு வந்த ரஜினிகாந்துக்கு அவரின் வேகத்தை பார்த்து ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இதனை ரஜினிகாந்த் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்திருக்கிறார்.

44 ஆண்டுகள்
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த ரஜினி, தனது வேகத்தாலும் ஸ்டைலாலும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார். 44 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக கோலொச்சி வருகிறார் ரஜினிகாந்த்.

பஞ்ச் டயலாக்
இதுவரை 167 படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒவ்வொரு படத்திலும் ஒரு ஸ்டைலை அறிமுகப்படுத்தி வருகிறார். பஞ்ச் டயலாக் பேசுவதிலும் ரஜினியை மிஞ்ச ஆளில்லை.

6க்கும் மேற்பட்ட மொழிகள்
ஒவ்வொரு படத்திலும் அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அவரது ரசிகர்களின் வேத மந்திரம். இதுவரை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

முதல் முறையாக ஹீரோ
தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த ரஜினி, எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

ஆசியாவிலேயே அதிக சம்பளம்
ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலை குவித்ததால் ரஜினியின் சம்பளமும் உயர்ந்தது. ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்தார் ரஜினிகாந்த்.

வசூல் மன்னன்
ரஜினி நடிப்பில் வெளியான பாஷா படம் வசூலில் வரலாற்று சாதனை படைத்தது. இதனால் வசூல் மன்னன் என்றும் அழைக்கப்படுகிறார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வருவது உறுதி
சமீப காலமாய் வயதுக்கு ஏற்றது போல் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்திருக்கிறார். பல படங்களில் வசனமாக பேசி வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊரறிய அறிவித்தார் ரஜினி.

பத்ம விருதுகள்
ஏராளமான விருதுகளை குவித்துள்ள ரஜினி தமிழக அரசின் 6 விருதுகளை குவித்திருக்கிறார். சினிமாத்துறையில் இவரது சாதனையை பார்த்து வியந்துப்போன மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை அளித்து கவுரவித்துள்ளது.

ஐகான் ஆஃப் ஸ்டைல்
இவரது வேகம், அதற்கேற்ற பாடிலாங்வேஜ் என இந்திய சினிமாவில் எந்த நடிகரிடமும் இல்லாத இந்த குவாலிஃபிகேஷனை பார்த்த மத்திய அரசு இதுவரை எந்த நடிகருக்கும் வழங்காத ஐகான் ஆஃப் ஸ்டைல் விருதை வழங்கி கவுரவித்தது.

70வது பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் 44 ஆண்டுகளாய் ஆட்சி செய்து வரும் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வழக்கம்போல் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடி வருகின்றனர் ரஜினியின் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











