ரஜினியிடம் எடக்கு மடக்காக கேள்வி கேட்ட சதீஷ்... அவரை நாசூக்காக விரட்டிய சூப்பர் ஸ்டார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் ஜெய்லர் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். அதன் கதை விவாதம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
கடைசியாக அவர் நடித்த பல படங்கள் சரியாக போகவில்லை. மாறாக, அவருடைய எதிர் துருவமாக கருதப்படும் நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டது.
இந்நிலையில் மிகப் பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி தள்ளப்பட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க, அண்ணாத்த படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை அதில் நடித்த நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

ரஜினியுடன் குஷ்பூ
தமிழில் குஷ்பு நடிப்பில் வெளிவந்த முதல் படமே நடிகர் ரஜினிகாந்துடன்தான். தர்மத்தின் தலைவன் படத்தில் தொடங்கி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் அவருடன் இணைந்து மொத்தம் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அண்ணாமலை மற்றும் பாண்டியன் படங்களில் மட்டும்தான் அவருடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் மீனா
மீனா நடிக்க வந்த முதல் ஆண்டிலேயே ரஜினியுடன் நடித்துவிட்டார் என்றாலும், அது மீனாவுடைய இரண்டாவது திரைப்படம்தான். எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய திரைப்படங்களில் அவருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், அதன் பின் எஜமான், வீரா, முத்து, குசேலன் மற்றும் அண்ணாத்த என்று அவருடன் இணைந்து மொத்தம் ஏழு படங்களில் நடித்துள்ளார். அதில் எஜமான், வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் மட்டுமே அவருடன் ஜோடியாக நடித்திருந்தார்.

வம்பிழுத்த சதீஷ்
அண்ணாத்த படப்பிடிப்பின்போது குஷ்பூ மற்றும் மீனா முன்னிலையில் நடிகர் சதீஷ் ரஜினிகாந்திடம்,"இரண்டு பேருடனும் நடித்துவிட்டீர்கள். யார் உங்களுக்கு பிடிக்கும்?" என்று கேட்க, மீனா மற்றும் குஷ்பூ ரஜினியை பார்த்து சார்... என்று தங்கள் பெயரை சொல்லுமாறு கேட்க, ரஜினி சடாரென்று கீர்த்தி சுரேஷை கை காட்டி,"எனக்கு கீர்த்தி சுரேஷைதான் பிடிக்கும்" என்று கூறிவிட்டாராம்.

விடாத சதீஷ் துரத்திய ரஜினி
அந்த பதிலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், சதீஷ் மட்டும் உஷாராக அடுத்த கேள்வியை கேட்டாராம்."நீங்கள் கீர்த்தியின் அம்மா மேனகாவுடனும் நடித்துள்ளீர்கள். இப்போது கீர்த்தியுடனும் நடித்துள்ளீர்கள். அவர்கள் இருவரில் யார் பிடிக்கும்" என கேட்டதிற்கு,"உங்களுக்கு ஷாட் ரெடி ஆயிடுச்சு. நீங்க போங்க" என்று ரஜினி தன்னை துரத்தியதாக சதீஷ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்திருந்தது கூடுதல் செய்தி.


Click it and Unblock the Notifications











