twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒற்றை மனிதருக்குள் இத்தனை திறமையா..? - 'திரையுலக மார்க்கண்டேயன்' சிவகுமார் #HBDSivakumar

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : நடிகர், ஓவியர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட சிவகுமாருக்கு இன்று 76-வது பிறந்தநாள். ஓவியராக இருந்து நடிகராக அறிமுகமானவர் இப்போது இலக்கியம், ஆன்மீகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வருகிறார்.

    திரைத்துறையில் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒழுக்கசீலராக இன்றளவும் 'திரையுலக மார்க்கண்டேயன்' எனப் போற்றப்படுபவர் சிவகுமார். தனது வாழ்வில் உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுபவராகவும், பலருக்கு ரோல்மாடலாகவும் வாழ்ந்து வருகிறார்.

    தனது நிறைவான குணத்தால் பலருக்கு விருப்பமானவராகவும், திரைத்துறையில் பலருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவரது வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கத் துடிப்பவர்களுக்கான எடுத்துக்காட்டு. அவரது அவதாரங்களில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்...

    நடிகர்

    நடிகர்

    ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். தொடர்ந்து ‘கந்தன் கருணை,' ‘துணிவே தோழன்' உட்பட பல படங்களில் துணை நடிகராக நடித்தார். பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சிவகுமார் சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ளார். 'அன்னக்கிளி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'சிந்து பைரவி' உட்பட பல படங்கள் ஒரு தேர்ந்த நடிகராக அவரது புகழைச் சுமந்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகுமார்.

    ஓவியர்

    ஓவியர்

    நடிகர் சிவகுமார் ஒரு தேர்ந்த ஓவியரும் கூட. தான் வரைந்த ஓவியங்களை வைத்துக் கண்காட்சிகளும் நடத்தியுள்ளார் சிவகுமார். அவரது 24 வயதுக்குள் அவர் வரைந்த பல ஓவியங்கள் பிரபலமானவை. பழைய கோட்டோவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை பலவகையான ஓவியங்களையும் வரைந்திருக்கிறார் சிவகுமார். அவரது ஓவியங்கள் 'பெயின்டிங்ஸ் ஆஃப் சிவகுமார்' எனும் பெயரில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. 'ஒருவேளை திரையுலகிற்குச் செல்லாமல் தொடர்ந்து ஓவியத் துறையில் சிவகுமார் இயங்கியிருந்தால் நவீன ஓவியத்திலும் அவர் பரிமளித்திருப்பார்' என மறைந்த ஓவியர் வீரசந்தானம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

    பேச்சாளர் / எழுத்தாளர்

    பேச்சாளர் / எழுத்தாளர்

    டைரி எழுதும் பழக்கமுள்ள சிவகுமார் தான் நடிக்க வந்த காலத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனது டைரிகளில் குறித்து வைத்திருக்கிறாராம். உலகையே உலுக்கிய பல சம்பவங்களும் இதில் அடக்கம். அவரது அற்புத நினைவாற்றலுக்குக் காரணம் அவரது டைரில் எழுதும் பழக்கமாகக் கூட இருக்கலாம். இலக்கியத்திலும் நல்ல வாசிப்பனுபவம் கொண்ட சிவகுமார் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் சிறப்பாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும் அறியப்படுபவர் சிவகுமார். சில மாதங்களுக்கு முன்பு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

    சொற்பொழிவாளர்

    சொற்பொழிவாளர்

    தனது 67 வயதில், சாலமன் பாப்பையா வற்புறுத்தலின் பேரில் கம்பன் கழகத்தில் பேசுவதற்காக கம்பராமாயணத்தைப் புரட்டிய சிவகுமார் பிறகு கம்பனின் கவியால் ஈர்க்கப்பட்டு மொத்த நூலையும் கரைத்துக் குடித்தார். மொத்த ராமாயணக் கதையையும் சாமான்யன் ரசிக்கும் மொழியில் தயார் செய்து, ஒரு சொட்டுத் தண்ணி, ஒரு பிட் பேப்பர் இல்லாமல் ஈரோடு கல்லூரியில 8,000 மாணவர்கள் முன்பு 2 மணி 20 நிமிடங்கள், விடாமல் தங்குதடை இன்றிப் பேசியபோது மொத்த அரங்கமும் துளி சத்தமின்றிக் கேட்டதாம். மகாபாரதத்தையும் முழுமையாக வாசித்து அறிந்தவர்.

    நினைவாற்றல் மிக்கவர்

    நினைவாற்றல் மிக்கவர்

    நடிகர் சிவகுமார் சங்க காலத்திலிருந்த பூக்களின் பெயர்களைக் கடகடவென்று தமது பிரசங்கத்துக்கு நடுவே கூறி எல்லோரையும் பிரமிக்க வைப்பது வழக்கம். 100 மலர்களின் பட்டியலை சிவகுமார் மடை திறந்தாற்போல் கையில் ஒரு சின்னக் குறிப்புக்கூட இல்லாமல் ஒப்பிப்பதைப் பார்த்துப் பலரும் வியந்திருக்கிறார்கள். தனக்கு அறிமுகமான ஒருவரைப் பற்றி இடைவெளி இல்லாமல் கால் மணி நேரத்திற்கும் மேல் பேசும் அளவுக்கு அபூர்வ நினைவாற்றல் கொண்டவர் சிவகுமார். தனக்கு நெருக்கமானவர்கள் மறைந்தால், அவர் பிறந்த நாள் முதற்கொண்டு நினைவில் வைத்து, மற்றவர்களிடம் அவரது நினைவுகளைப் பகிர்வாராம்.

    நல்ல குடும்பத் தலைவர்

    நல்ல குடும்பத் தலைவர்

    ரசிகர்களுக்கு உதாரண புருஷனாகத் திகழும் சிவகுமார் நல்ல குடும்பத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தனது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரையும் நல்ல வழியில் திறமையானவர்களாக வளர்த்ததே அவரது சாதனைகளுல் ஒன்று. நடிப்புத் துறையில் எந்தச் சிக்கல்களும் இல்லாமல் இருவரும் இத்தனை வருடங்களாகத் தொடர்வதும் அவரது வழிகளைப் பின்பற்றுவதால் தான் என இருவருமே பல மேடைகளில் கூறியிருக்கிறார்கள். அனைவரும் பின்பற்றவேண்டிய நெறியோடு வாழும் பன்முகக் கலைஞர் சிவகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    English summary
    Actor Sivakumar's 76th birthday is today. He is distinguished as actor, illustrator, artist, speaker and writer. Sivakumar is a role model for many of his perfect character and guides many in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X