ரசிகர்களின் எவர் க்ரீன் ஃபேவரைட் நடிகை குஷ்பு பிறந்தநாள் இன்று
சென்னை : நடிகை, அரசியல் தலைவர், தயாரிப்பாளர், டிவி பிரபலம் என தென்னிந்திய சினிமா உலகில் கொடிகட்டி பறப்பவர் குஷ்பு. 1980 கள் துவங்கி தற்போது வரை பிரபலமான, ரசிகர்கள் பலரின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் குஷ்பு.
நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே செல்லும் குஷ்பு இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் சோஷியல் மீடியாவில் குஷ்புவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரம்
மும்பையில் பிறந்து, வளர்ந்தவரான குஷ்பு, 1980 ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாக்களில் அறிமுகமாகி நடித்து வந்தார். பிறகு வளர்ந்து, ஹீரோயினாக கோவிந்தா, அமிர்கான் உள்ளிட்டோருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து பிரபலமானார். பிறகு தெலுங்கில் வெங்டேஷுக்கு ஜோடியாக கலியுக பாண்டவருலு படத்தில் நடித்து, தென்னிந்திய சினிமா உலகிற்குள் என்ட்ரி ஆனார். பிறகு தமிழில் ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

தமிழில் டாப் ஹீரோயின்
இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, தமிழில் மட்டும் 150 படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, கனவு நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு மட்டும் தான். இது வரை வேறு எந்த இந்திய நடிக்கும் கோயில் கட்டப்பட்டது இல்லை. அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

குஷ்பு பெயரில் உணவுகள்
குஷ்பு முன்னணி நடிகையாக இருந்த சமயத்தில் அவர் பெயரில் குஷ்பு இட்லி, குஷ்பு காஃபி என பல உணவு வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, பிரபலமாக்கப்பட்டன. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பு. மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார் குஷ்பு.
Recommended Video

சுந்தர்.சியுடன் காதல்
முறைமாமன் படத்தில் நடித்த போது டைரக்டர் சுந்தர்.சி உடன் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் பெயரில் அவினி சினி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார் குஷ்பு. இதன் மூலம் பல டிவி சீரியல்கள், படங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றார். பல சீரியல்களிலும் குஷ்பு லீட் ரோலில் நடித்துள்ளார்.

அரசியலில் என்ட்ரி
பிறகு அரசியலிலும் தடம் பதித்தார் குஷ்பு. முதலில் திமுக.,வில் இணைந்த குஷ்பு, பிறகு அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். பிறகு அதிலிருந்து விலகி, தற்போது பாஜக.,வில் இருந்து வருகிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

குஷ்புவிற்கு லவ் ப்ரோபோஸ்
சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பி உள்ள குஷ்பு, ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த கையோடு, அனைவரும் அசந்து போகும் அளவிற்கு தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் குஷ்பு மீண்டும் ஹீரோயின் ரோலில் நடிக்க போகிறாரா என ரசிகர்கள் பலர் கேட்க துவங்கி விட்டனர். இன்னும் சில தீவிர ரசிகர்கள் குஷ்புவிற்கு லவ் ப்ரோபோசே செய்து விட்டார்கள்.

குஷ்பு பெற்ற விருதுகள்
டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வரும் குஷ்பு, தமிழக அரசின் மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ளார். தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதினையும் குஷ்பு பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











