நடிகரின் கண்ணீர் கதை.. குடியால் பறிபோன வாய்ப்பு.. ராதிகாவின் முதல் பட ஹீரோவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
சென்னை: 80களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் தான் நடிகர் சுதாகர். 1977ஆம் ஆண்டு தொடங்கிய பாரதிராஜாவின் திரை பயணம், வெற்றி பயணமாக அமைந்த காலகட்டம் அது. பதினாறு வயதினிலே படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் வந்த அடுத்த படம் கிழக்கே போகும் ரயில். அதில், வசீகரமான ஒரு இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமானவர் தான் சுதாகர். அந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. இந்த படமும் வெற்றித்திரைப்படமாக அமைந்து, சுதாகரின் வெற்றி பயணம் தொடங்கியது. சுதாகர், ராதிகா என்றால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நிஜமான காதலர்கள் என்று நினைக்கும் அளவிற்கு இவர்களின் ஜோடி பொருத்தம் பக்கவாக இருந்தது.
இவர்கள் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 11க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்கள். இதனால், காதல் வதந்திகளும் இவர்களை சுற்றி இறக்கை கட்டி பயணித்தது. பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருந்ததால், அடுத்தடுத்த கதாநாயகிகள் கூட சுதாகர் நடித்த போதும், காதல் வதந்திகளும் பரவின. அப்போதைய காலகட்டத்தில் கல்லூரி பெண்கள் சுதாகரை வெறிபிடித்தது போல சுற்றி வந்தார்கள். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எப்போதும் பெண்கள் கூட்டம் நிரம்பி இருக்குமாம். நடிகர் சுதாகர் உச்சத்திற்கு செல்ல செல்ல அதிகரித்த குடிப்பழக்கம் அவரை தடம் மாற வைத்தது. பாரதிராஜா இயக்கிய நிறம் மாறாத பூக்கள் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த போதிலும் சுதாகரின் கவனம் சிதறியது.

நடிகர் சுதாகர்: 'சக்களத்தி' என்கின்ற பட சூட்டிங்கில் சுதாகர் முழு போதையுடன் வந்ததாக செய்தி பரவியது. இதனால், அடுத்த இயக்குனர்களும் சுதாகருக்கு வாய்ப்பு கொடுக்க பயப்பட ஆரம்பித்தனர். நல்ல மார்க்கெட் இருக்கும் போதே புதுப்பட வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. இதனால், பெண்கள் கூட்டமும் குறைந்தது. ஒரு கட்டத்தில் படங்களும் இல்லை, சம்பாதித்த பணமும் குடி, ஆடம்பர வாழ்க்கையால் கரைந்து போனதால், சினிமா வட்டாரத்தில் முடிந்தது சுதாகர் கதை என்கிற பேச்சு எழுத்தது. இதையடுத்து, சுதாகர் மூட்டை முடிச்சுகளுடன் ஆந்திராவிற்கு சென்று வாய்ப்பு தேடினார்.
குடியால் வந்த வினை: தமிழ் நாட்டில் சூப்பர் ஹீரோவாக கலக்கி வந்த சுதாகருக்கு, தெலுங்கு சினிமாவில் காமெடி வேடம் தான் கிடைத்தது. இதனால், கோமாளி போல சேட்டைகள் செய்து நடிக்க ஆரம்பித்தார். அப்படியே ஐந்து வருடம் அங்கேயே வாழ்க்கை நடத்தினார். என்னத்தான் கோமாளியாக மாறினாலும், அவருடைய பழக்க வழக்கங்களும் ஆடம்பரங்களும் மாறவேவில்லை. இதையடுத்து, இவருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல், சுதாகர் மிகவும் கஷ்டப்பட்டார்.

வெற்றிப்படங்கள்: சுதாகர் நடித்த பல படத்தின் தலைப்பை கதையை சொல்லும் அந்த அளவிற்கு தனித்துவமாக இருக்கும். ஒருத்தி மட்டும் கரையினிலே, தரையில் வாழும் மீன்கள், நிறம் மாறாத பூக்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், கரை கடந்த குறத்தி, பெண்ணின் வாழ்க்கை, கல்லுக்குள் ஈரம், அழைத்தால் வருவேன், அன்னப்பறவை என அழகிய தமிழ் தலைப்புகள் அப்பொழுது மிகப் பிரபலமாக இருந்தன. அந்த காலத்தில் வானொலிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடல்களை பெரும்பான்மை சுதாகர் நடித்த படங்களாக தான் இருக்கும். கிழக்கே போகும் ரயில் படத்தில் இருந்து மாஞ்சோலை கிளிதானோ, நிறம் மாறாத பூக்களில் இருந்து ஆயிரம் மலர்களே மலருங்கள், சுவர் இல்லாத சித்திரங்களில் இருந்து காதல் வைபோகமே, எங்க ஊர் ராசாத்தி படத்தில் இருது பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் ஆகிய பாடல்கள் சுதாகர் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு சென்ற பின்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஹீரோ டூ காமெடியன்: முழு நேர காமெடி நடிகராக நடிக்க வந்து பின் நாட்களில், ஹீரோவாக மாறியவர்கள் தமிழ் சினிமாவில் அதிகம், ஆனால் வெற்றி பட நாயகனாக அறிமுகமாகி, நான்கு வருடங்களுக்குள் முழு நேர காமெடி நடிகனாக மாறியது சுதாகர தான். தமிழக மக்கள் இவரை மறந்து விட்ட நிலையில் திடீரென ரஜினிகாந்தின் அதிசய பிறவி படத்தில் காமெடியனாக தோன்றினார். இவரைப்பார்த்த பலர் சுதாகரா இது என்று புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தினர். நன்றாக வாழ்ந்த இடத்தில், அதைவிட சுமாரான வாழ்க்கையை வாழ்வது அவருக்கு மன சங்கடத்தை தந்தது. இதனால், சம்பளம் குறைவாக கிடைத்தாலும் பரவாய் இல்லை என முடிவு செய்து ஆந்திராவிற்கே மீண்டும் சென்று தன்னை காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு சுதாகர் தமிழ் சினிமாவிற்கு வர எந்த முயற்சியும் செய்யவில்லை.
காலம் தனக்கு ஏற்றவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பதை போல, திரை உலகமும் தன் போக்கிக்கு எற்ப சிலருக்கு வாய்ப்பை அளிக்கிறது. அந்த வாய்ப்பை பெறுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதுடன் அடுத்த கட்ட போக்கை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ற தங்களை தயார் படுத்திக் கொண்டால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் இல்லை என்றால். விலக்கப்பட்டு நினைவுகளாகத்தான் தங்கி இருக்க முடியும் என்பதற்கு நடிகர் சுதாகர் ஒரு உதாரணம்.


Click it and Unblock the Notifications











