புரடியூசர் ஆகிறார் சிம்ரன்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக இருந்தவர் சிம்ரன். இவரது இடுப்பசைவில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நாயகர்களும் கூட மெய் மறந்து கிறங்கிப் போயிருந்த காலம் அது.
கமல்ஹாசன் முதல் விஜய், அஜீத், சூர்யா வரை அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து முடித்தவர்.
திடீரென ஒரு நல்ல நாளில் கல்யாணமாகி டெல்லிக்குப் போனவர் குழந்தை பெற்று சினிமாவுக்கு குட்பை சொன்னார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். வந்தவருக்கு அண்ணி, அக்கா, அம்மா ரோல்கள்தான் கிடைத்தன. அப்செட் ஆனவர் நடிப்பை மீண்டும் விட்டார்.
இப்போது நிரந்தரமாக சென்னையில் தங்கி படத் தயாரிப்பில் இறங்கப் போவதாக கூறியுள்ளார். இவரை வைத்து கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தை இயக்கியவரான ராஜேஷ்வர் தனது மகன் ரஞ்சனை நாயகனாக வைத்து திடீர் நகரில் ஒரு காதல் கானா என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது கூடியிருந்த செய்தியாளர்களிடையே சிம்ரன் பேசுகையில்,
கே.ராஜேஷ்வர் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல. சிறந்த திரைக்கதை ஆசிரியர். சிறந்த வசனகர்த்தா. அவருடைய இயக்கத்தில் கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நான் நன்றாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
தமிழில் சொந்தமாக சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன். மும்பையில் இருந்துகொண்டு இந்த வேலைகளை செய்ய முடியாது என்பதால், சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கே நான் நிரந்தரமாக குடியேறப்போகிறேன். இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொந்தமாக வீடு மற்றும் அலுவலகம் கட்டி வருகிறேன்.
அடுத்த வருட ஆரம்பத்தில், சினிமா மற்றும் டெலிவிஷன் பட தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுவேன். அதேசமயம் நல்ல கதையும் கதாபாத்திரமும் கிடைத்தாதல் மீண்டும் நடிப்பேன். ராஜேஷ்வர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். நல்ல படங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் சிம்ரன்.
சென்னையில் நிரந்தரமாக செட்டிலாகப் போவதாக கூறிய சிம்ரன், தன்னுடன் தனது கணவர், குழந்தை தங்குவார்களா என்பதை சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











