வானில் மறைந்த திரைமின்னல்.. சவுந்தர்யா பிறந்ததினம் இன்று.. நினைவுகூர்ந்த ரசிகர்கள்!
ஐதராபாத் : திரையில் நடிக்கத் துவங்கி சிறிது காலத்திலேயே ஏராளமான புகழை பெற்றவர் நடிகை சவுந்தர்யா.
இவரது வெற்றியை போலவே இவரது மரணமும் வெகு விரைவிலேயே நடந்து முடிந்தது.
தேர்தல் பிரசாரத்திற்காக தன்னுடைய சகோதரருடன் சென்ற சவுந்தர்யா விமான விபத்தில் பலியானார். இன்று அவரது பிறந்தநாள்.

ரசிகர்களை கவரும் வித்தை
சினிமாவில் நடிக்க தினந்தோறும் ஏராளமான நடிகைகள் வருகின்றனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகின்றனர். ஆனால் ஒருசிலரே ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். அவர்களுக்கு ரசிகர்களை கவரும் வித்தை சரியாக தெரிகிறது. அதை சரியாக பயன்படுத்தி திரையில் நீடிக்கின்றனர்.

நடிகை சவுந்தர்யா
தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து அதை வெற்றிப்படங்களாகவும் கொடுக்கும் நடிகைகள் சிலரே திரையில் காணப்படுகின்றனர். கதைத் தேர்வு என்பது மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் நடிகை சவுந்தர்யா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக இருந்தவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
திரையுலகிற்கு வந்த சிறிது காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். திருமணத்திற்கு பிறகு தனக்கு பிடித்தமான நடிப்பை கைவிடாமல் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர்.

மிகையில்லாத நடிப்பு
தன்னுடைய இயல்பான மிகையில்லாத நடிப்பால் ரசிகர்களை மட்டுமில்லாமல் சக நடிகர், நடிகைகளின் நன்மதிப்பையும் பெற்றவர் சவுந்தர்யா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலிலும் ஈடுபட்டார். திரைத்துறை மற்றும் அரசியலில் இவரது வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது.

தமிழில் சிறப்பான அறிமுகம்
கர்நாடகாவை சேர்ந்த சவுந்தர்யா கன்னடப் படத்தின் மூலமாக தன்னுடைய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது கோலிவுட் தான். 1993ல் கார்த்திக்குடன் ஜோடியாக இவர் நடித்த பொன்னுமணி படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
தொடர்ந்து ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா காதலா, அர்ஜூனுடன் மன்னவரு சின்னவரு, விக்ரமுடன் கண்டேன் சீதையை, விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம், பார்த்திபனுடன் இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிறப்பான படையப்பா படம்
அடுத்தடுத்து நேரம் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் நடித்த சவுந்தர்யா, திருமணம் செய்துக் கொண்ட பின்பும் கன்னடப் படங்களில் நடித்தார். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இவர் தொடர்ந்து இருந்தார். படையப்பா படத்தில் வேலைக்காரி என்று ரம்யா கிருஷ்ணன் சொல்வதும் அதற்கு ரஜினி பதிலடி கொடுப்பதும் அவரது கேரக்டரை மேலும் அழகுப்படுத்தியது.

விமான விபத்தில் பலி
தொடர்ந்து கண்டேன் சீதையை போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த கேரக்டர்களிலும் நடித்து பெயர் பெற்றார். கடந்த 2004ல் தேர்தல் பிரசாரத்திற்காக விமானத்தில் சென்ற இவர், அதுதான் தனது இறுதிப்பயணம் என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த விமான விபத்தில் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து இவரும் பலியானார். தொடர்ந்து கண்டேன் சீதையை போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த கேரக்டர்களிலும் நடித்து பெயர் பெற்றார். கடந்த 2004ல் தேர்தல் பிரசாரத்திற்காக விமானத்தில் சென்ற இவர், அதுதான் தனது இறுதிப்பயணம் என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த விமான விபத்தில் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து இவரும் பலியானார்.

சவுந்தர்யா பயோ -பிக்
தற்போது இவரது பயோ-பிக்கை எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யாவின் 50வது பிறந்தநாளையொட்டி அவரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். அவர் தனது 32வது வயதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











