இம்முறை டிரைவர் ஜமுனாவாக களமிறங்கும் ஐஷ்வர்யா ராஜேஷ்... முருதாஸ் பள்ளியிலிருந்து வந்த தரமான இயக்குநர்
சென்னை: வழக்கமாக தீபாவளி என்றாலே புதுப் படங்கள் வெளியாவது, புது பட அறிவிப்புகள் வருவது, படத்தின் வெளியீட்டு நாள் அறிவிக்கப்படுவது போன்ற சினிமா சார்ந்த விசயங்கள் நடக்கும்.
அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது.
மேலும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் முழுக்க முழுக்க காரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவர் ஜமுனா
18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. வத்திக்குச்சி என்கிற வித்யாசமான ஆக்சன் திரைப்படத்தை இயக்கியிருந்த கிங்ஸ்லின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் முருகதாசிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தீபாவளியான இன்று தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி, இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

படக் குழு
ஐஸ்வர்யா ராஜேஷ், ஶ்ரீரஞ்சினி, ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் பிக் பாஸில் தற்சமயம் போட்டியாளராக இருப்பவருமான மணிகண்டன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வத்திக்குச்சி திரைப்படத்தில் பிரமாதமான பின்னணி இசையும் பாடல்களையும் கொடுத்திருந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

பெண் கேப் டிரைவர்
இயக்குநர் கிங்ஸ்லினுடைய முதல் படம் எப்படி வித்தியாசமான விறுவிறுப்பான ஆக்க்ஷன் திரைப்படமாக இருந்ததோ அதேபோல இந்தப் படமும் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருப்பது ட்ரெய்லரை பார்த்ததிலிருந்து தெரிய வருகிறது. முதல் முறையாக ஒரு பெண் கார் ஓட்டுனரைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படம் என்றே சொல்லலாம். நிஜ வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் கார் ஓட்டுவதற்கு பயந்த நடிகை ஐஸ்வர்யா இந்தப் படத்தில் காரை வைத்து பல சாகசங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படங்களின் பட்டியல்
டிரைவர் ஜமுனா திரைப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் சொப்பன சுந்தரி, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக், ஃபரானா போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டும் நடித்து முடித்தும் இருக்கிறார். இதைத் தவிர்த்து ஏற்கனவே அவர் நடித்து முடித்த இடம் பொருள் ஏவல் மற்றும் துருவ நட்சத்திரம் திரைப்படங்கள் வெளியாக வேண்டியுள்ளது. தமிழ்ப் படங்களை தவிர்த்து மூன்று மலையாள படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் வெகு சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











