சிவகார்த்திகேயன் மீது ஏன் டார்கெட்?.. அவர் பாராட்டுவதில் என்னதான் தவறு?.. யார் மாற வேண்டும்?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூலித்தது. அதற்கு முன்னதாக அவர் நடித்த மாவீரன் திரைப்படமும் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இப்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இரண்டு படங்களையுமே இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் இயக்கிவருகிறார்கள். இப்படி அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தாலும் அவர் மீது ஒருதரப்பினர் தொடர்ந்து டார்கெட் வைத்து அடித்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை.
சினிமா பலருக்கு கனவு தொழிற்சாலையாக இருக்கிறது. அதற்குள் நுழைந்து பணம், பெயர், புகழ் ஆகியவை சம்பாதிப்பதற்காக ஏகப்பட்ட கஷ்டங்களை சந்திக்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வெற்றியாக மாற்றுவதற்கென கடுமையாக உழைக்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயனும். இப்போது அவர் டாப் 5 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருந்தாலும் இந்த இடத்தை அவர் ஒரே நைட்டில் பிடித்துவிடவில்லை. முதலில் சின்னத்திரையில் போட்டியாளராக நுழைந்து; பிறகு தொகுப்பாளராக மாறி; அதற்கு பின்பு ஹீரோவாகி; பல விமர்சனங்களையும், கிண்டல்களையும் சந்தித்துதான் இந்த இடத்துக்கு அவர் வந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுத்துவிடவோ இல்லை மறந்துவிடவோ முடியாது.

என்னவெல்லாம் பிரச்னைகள்: சிவகார்த்திகேயன் தனுஷால்தான் சினிமாவுக்குள் வந்தார். அது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். சிவாவும் தனுஷ் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் தனுஷை அவர் ஓவர் டேக் செய்ய ஆரம்பித்தபோது தொடங்கியதுதான் பிரச்னை. டாடா படத்தில் ஒரு வசனம் வருமே, 'உங்களுக்கெல்லாம் உங்களால் நன்றாக இருக்க வேண்டும். உங்களைவிட நன்றாக இருக்கக்கூடாது' என்று. அந்த வசனம் அப்படியே சிவாவின் திரை வாழ்க்கைக்கு பொருந்தும். ஓபனாக சொல்ல வேண்டுமென்றால் தனுஷால் வந்தவர் எப்படி தனுஷை ஓவர் டேக் செய்யலாம் என்ற பொதுபுத்தியுடன் சிவாவையும் அவரது படங்கள் மற்றும் வசூலையும் அணுக தொடங்கினார்கள்.
கொடுக்காளி பிரச்னை: முதலில் ரெமோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நிறைய பிரச்னைகள் கொடுக்கிறார்கள் என்று கலங்கினார். ஒருவர் கலங்கினால் அவரது கண்ணீரை துடைக்க கரங்கள் நீட்டவில்லை என்றாலும் மேற்கொண்டு கண்ணீர் வருவதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது. ஆனால் அந்த விஷயத்தில் இரண்டாவது சொன்னதுதான் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயத்தை வைத்து பலரும் ட்ரோல் செய்தார்கள். குறிப்பாக அவர் பேசியது சுற்றி வளைத்து தனுஷை தாக்குவது போல் இருந்தது என்றுதான் கூறினார்கள். ஆனால் சிவகார்த்திகேயனோ அந்த விஷயத்தை பற்றி அடுத்தடுத்த நாட்களில் பேசவில்லை. இருப்பினும் அவருக்கு எதிர் தரப்பில் இருப்பவர்களோ அந்த விவகாரத்தை கொஞ்சம்கூட விட்டபாடில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவர் ஒரு பெரிய ஹீரோவுக்கு எதிராக நிறுத்தி கார்னர் செய்யப்படுகிறார் என்பதை.

இன்னொரு விஜய் ஆகக்கூடாதா?: அதேபோல் GOAT படத்தில் ஒரு காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததும் போதும்; பலரும் துடிதுடித்தார்கள். சிவாவெல்லாம் இன்னொரு விஜய்யா என்றுதான் கேள்வியை முன்வைத்தார்கள். ஆனால் இங்கு யாருக்கும் எந்தவொரு இடமும் நிரந்தரம் இல்லை என்பதுதான் இயற்கை விதித்து வைத்திருக்கும் எதார்த்தம் என்பதை பலரும் புரிந்துகொள்ள மறுத்தார்கள். ரஜினியேகூட இடையில் சறுக்கியபோது அவருக்கு மாற்றாக விஜய்யை வைத்தார்கள். அப்போதும் விமர்சனங்கள் எழுந்தனதான். ஆனால் சிவா விஷயத்தில் நடந்தது போல் இவ்வளவு மூர்க்கத்தனமாக இல்லை. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏன் இப்படி என்று கேட்டால் ஒன்றே ஒன்றுதான் அவரது வெற்றியையும் வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் ஆற்றாமைதான் அது.
தகுதிகள் இருக்கத்தானே செய்கிறது: முக்கியமாக ஒருவருக்கு தகுதிகள் எதுவும் இல்லையென்றால் அவரை கிண்டல் செய்யலாம், அந்த இடத்துக்கு பொருத்தமில்லாதவர் என்று கூறலாம். ஆனால் எஸ்கேவுக்கு அப்படி எதுவும் இல்லை. விஜய் ஒரு மேடையில் கூறியதுபோல் அவர் சிறு குழந்தைகளை பிடித்துவிட்டார். ரஜினியும் விஜய்யும் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை நோக்கி நகர்ந்ததற்கு நடிப்பு, ஸ்டைல், மாஸ் உள்ளிட்டவைகளோடு சிறுவர்களையும் ரசிக்க வைத்ததும் முக்கிய காரணம். அதனை எஸ்கேவும் செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதனால் அடுத்த விஜய்யாக மாறுவதற்கான அத்தனை தகுதிகளும் சிவாவுக்கு இருக்கும்போது ஏன் அவர் மீது இவ்வளவு கிண்டல்களும், விமர்சன கணைகளும் வீசப்படுகின்றன? இதற்கிடையே இசையமைப்பாளர் டி.இமான் விவகாரத்தில் சிவாவை பலர் பேசியதெல்லாம் அபத்தத்தின் உச்சம். ஏனெனில் இதுதான் அவர் செய்த துரோகம் என்று இமான் நேரடியாக கூறாதபோது எஸ்கேவுக்கு எதிரானவர்கள் தங்களுக்கு தேவையான கதையை எழுத தொடங்கிவிட்டார்கள்.

இதுதான் காரணம்?: பொதுவாக மிடில் கிளாஸிலிருந்தும், எந்தவித பின்னணியும் இல்லாமல் ஒருவர் வெற்றி பெற்றால் அதனை நம்முடைய வெற்றியாகவே பார்க்கும் மனோபாவம்தான் மனிதர்களுக்கு இருக்கும். அதிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அப்படித்தான். அடுத்தவரின் வெற்றி பரிபூரண உழைப்பாலும், போராட்டத்தாலும் வந்தால் அதனை மதித்து கொண்டாடி தீர்ப்பார்கள். கிரிக்கெட்டில்கூட சென்னையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வென்ற பாகிஸ்தானை சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். அது கிரிக்கெட் உலகத்தில் சர்வதேச அளவில் ஒரு நாகரீகத்தின் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படித்தான் சினிமாவிலும் நல்ல படங்களை, திறமையாளர்களின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் ஒருதரப்பினரின் அணுகுமுறையை பார்க்கும்போது அவர்களுக்கு எஸ்கே மீது பொறாமை ஏற்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.
அப்பாற்பட்டவர் இல்லைதான்: சிவகார்த்திகேயன் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் அப்பாற்பட்டவரா என்று கேட்டால் இல்லைதான். ஆனால் வன்மத்துக்கு உட்பட்டவர் இல்லை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அவர் மீது விமர்சனங்களையும் கிண்டல்களையும் வைத்து வருபவர்கள் லேட்டஸ்ட்டாக ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அதாவது புதுமுகங்கள் இயக்கும் படங்கள், நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் அவர்களை நேரில் அழைத்து பாராட்டுகிறார். இதனையும் இப்போது பலரும் வன்மத்தோடு அணுக தொடங்கியிருக்கிறார்கள். சிவா என்ன பெரிய ரஜினிகாந்த்தா நேரில் அழைத்து பாராட்டுவதற்கு என்ற தட்டையான கேள்வியை முன்வைக்கிறார்கள். ஏன் ரஜினிகாந்த் மட்டும்தான் புதுமுகங்களை அழைத்து பாராட்ட வேண்டுமா? பாராட்டுவதற்கான நல்ல மனம் இருப்பதைத்தானே இங்கு கவனிக்க வேண்டும். அந்த மனம் சிவாவுக்கு இருப்பதை பாராட்ட ஏன் திட்டமிட்டே தவிர்க்கிறார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
யார் மாற வேண்டும்: சிவா பாராட்டுவதை விமர்சிப்பவர்களுக்கு லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சினிமா மட்டுமில்லை எந்த துறையாக இருந்தாலும் புதுமுகங்கள் வளர்வதற்கும் அவர்கள் நிலைப்பதற்கும் அவர்களை விட சீனியர்கள் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இப்போது இருப்பவர்களைவிடவும் சீனியர் லிஸ்ட்டில்தான் இருக்கிறார். ஏகப்பட்ட வெற்றிகளை கொடுத்து தன்னை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார். எனவே அவர் பாராட்டுவதில் என்ன தவறு இருந்துவிட போகிறது. சிவகார்த்திகேயனின் திரைப்படங்களை விமர்சிப்பது, கிண்டல் செய்வது என்பது அவரைத்தான் பெரும்பாலும் பாதிக்கும்.
ஆனால் அவர் புதுமுகங்களை பாரட்டுவதை விமர்சனம் செய்வது, மீம்ஸ் போட்டு கிண்டல் செய்வது எல்லாம் அவர் பாராட்டியவர்களையும் பாதிக்கும் என்பதை ஏனோ அவர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்தையும் மீம்ஸ்களாக பார்க்கும் மனோநிலை அதிகரித்துவருவது மனித குலத்துக்கும் அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கும் நல்லது இல்லை என்பதுதான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உண்மை. இதே குணம் வளர்ந்துகொண்டே போனால் சிவா மட்டுமில்லை யார் வேறு யாரை பாராட்டினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத குரூர நிலையில்தான் சிலர் இருப்பார்கள். எனவே அவர்கள் உடனடியாக மாறினால் அவர்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்குமே நல்லதுதான் என்ற கருத்துதான் பலரிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications