»   »  "அந்நியன்" டிரெய்லர் திடீர் வாபஸ்!

"அந்நியன்" டிரெய்லர் திடீர் வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

அந்நியன் பட டிரெய்லரில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருப்பதாக டிஸ்டிரிபியூட்டர்கள் புகார் கூறியதால் பாய்ஸ் பட நிலை இதற்கும் வந்துவிடக்கூடாது என பயந்த டைரக்டர் ஷங்கர், தியேட்டர்களிலிருந்து டிரெய்லர்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கிவிட்டாராம்.

மிகுந்த பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் இடையே ஷங்கரின் அந்நியன் படம் ஒரு வழியாக (படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது) ஜூன் 10ம் தேதி ரிலீஸாகப் போகிறது. ரூ.25 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியத் திரையுலகில் மிகவும் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 2வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஷாருக்கான் நடித்து பெரும் பொருட்செலவில் தயாரான தேவதாஸ் படத்திற்கு ரூ.35 கோடி செலவானதாம். இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது "அந்நியன். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் டைரக்ட் செய்து, விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதாம்.


இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை மலேஷிய விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு எடுத்துள்ளார்கள். இதில் விக்ரம் 16 விதமான கெட்டப்புகளில் வருகிறார். படத்தில் 5 பாடல்களும், 4 சண்டைக் காட்சிகளும் உள்ளன. ஒரு சண்டைக்காட்சியை சென்னை ஜே.ஜே. இன்டோர் ஸ்டேடியத்தில் 25 நாட்கள், 200 காமிராக்களை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு 525 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் மொத்தம் 150 பிரிண்டுகள் போடப்படுகின்றன.

இந்தப் படத்திற்காக விக்ரம் கடந்த ஒன்றரை வருடங்களாக வேறு எந்தப் படத்திற்கும் கால்ஷீட் கொடுக்காமல் மிகவும் ஈடுபாட்டுன் நடித்துக் கொடுத்துள்ளார்.

அந்நியன் குறித்து டைரக்டர் ஷங்கரை விட, நாயகன் விக்ரமை விட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதனால் இந்தப்படத்தின் விற்பனை உரிமையை வேறு யாருக்கும் வழங்காமல் தானே சொந்தமாக வெளியிடுகிறார். வெளிநாடுகளிலும் இவரே சொந்தமாக வெளியிடுகிறார்.

மேலும் திருட்டு விசிடியால் பாதிப்பு அதிகமாக இருக்காது என்பதால் போட்ட காசை எடுத்து விடலாம் என்று ரவிச்சந்திரன் நம்புகிறார். ஆனால் அந்த நம்பிக்கை வீண் போய் விடுமோ என்ற பயம் இப்போது ஏற்பட்டிருக்கிறதாம்.

ரசிகர்களை கவருவதற்காக அந்நியனின் டிரெய்லர் இப்போது தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் காட்டப்பட்டு வருகிறது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதாம்.

இதனால் படத்திற்கு பெண்களின் ஆதரவு இல்லாமல் போய்விடுமோ என்று டிஸ்டிரிபியூட்டர்களுக்கு பயம் வந்து விட்டதாம். ஏற்கனவே பாய்ஸ் படத்திற்கு ஏற்பட்ட நிலை போல அந்நியனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் ஷங்கரிடம் நிலைமையை டிஸ்டிரிபியூட்டர்கள் கூறியுள்ளார்.

நிலைமையை புரிந்து கொண்ட ஷங்கர், உடனே எல்லா தியேட்டர்களிலிருந்தும் டிரெய்லர்களை திரும்ப வாங்க சொல்லி விட்டாராம். இதனால் டிரெய்லர்களில் வேறு காட்சிகளை சேர்க்கும் பணி வேகமாக நடந்து வருகிறதாம்.

ஒரு முறை பட்ட அனுபவத்தால் ஷங்கர் மிகவும் உஷாராகி விட்டார் என்கின்றனர் கோடம்பாக்க வாசிகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil