வாலியை எப்போதும் வெறுப்பேற்றியுள்ள பாக்யராஜ்... ஆனால் அவருடன் தொடர்ந்து வேலை செய்த காரணம் தெரியுமா?
சென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் நடிகர் சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதியவர் வாலி.
தமிழ் சினிமாவில் அதிக ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ள பெருமை கவிஞர் வாலி அவர்களையே சேரும்.
அதேபோல எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இயக்குநர்களுடன் கருத்து வேறுபாடு
பொதுவாக கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் அதே போல கவிஞர்களுக்கும் இயக்குனர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நடக்கும். அதைத் தாண்டி தான் பல வெற்றி பாடல்களை பலரும் கொடுத்து வருகிறார்கள். இயக்குனர் சங்கர் தான் முதன் முதலில் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் வாலி என்று தான் முதலில் விளம்பரம் செய்யப்பட்டதாம்.

சிக்கு புக்கு ரயிலே
ஆனால் சிக்கு புக்கு ரயிலே பாடல் எழுதி கொடுத்த போது மாற்று வரிகளை கேட்டாராம் சங்கர். இந்த வரிகள் கண்டிப்பாக ஹிட் ஆகும் என வாலி கூறியும் அடம்பிடித்து வேறூ வரிகள் வாங்கிச் சென்றாராம் சங்கர். ஆனால் பாடல் பதிவின் போது சிக்கு புக்கு ரயிலே வரிகளைத்தான் சங்கர் பயன்படுத்தினாராம். அதனால் கோபித்துக் கொண்டு இனிமேல் உன் படங்களுக்கு பாடல்கள் எழுத மாட்டேன் என்று அந்த படத்திற்கு வேறு எந்தப் பாட்டையும் அவர் எழுதவில்லையாம்.

பாக்யராஜ்
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் திரைப்படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். பின் பாக்யராஜ் இசையமைத்த இது நம்ம ஆளு திரைப்படத்திலும் பாடல்கள் எழுதினார். பாக்யராஜிற்கு பாடல்கள் எழுதும் போது எரிச்சல் அடைவாராம் வாலி. காரணம் சிகரெட்டை அதிகமாக புகைத்துத் தள்ளுவாராம் பாக்யராஜ். அவரை விட தான்தான் அதிக புகை இழுத்துள்ளதாக வாலி கூறியுள்ளார்.

லேட் ரியாக்ஷன்
அதுமட்டுமின்றி ஒரு பாடலின் பல்லவியை மட்டும் எழுதிக் கொடுத்தால் அதனை வாங்கி நீண்ட நேரம் படிப்பாராம் பாக்யராஜ். தான் அதற்குள் தூங்கி விழுந்து எழுந்து பாக்யராஜ் வீட்டில் கொடுக்கப்படும் உணவை சாப்பிட்டு முடித்து பல நேரம் காத்திருந்தாலும் அதே பல்லவியை பார்த்துக் கொண்டே இருப்பாராம். இதனாலேயே அவருடைய படங்களுக்கு எழுதக்கூடாது என்று பாடல் எழுதி முடித்தவுடன் அங்கிருந்து கிளம்பி செல்வாராம். ஆனால் அவருடைய உறவினரிடம் ஒரு கவரை பாக்யராஜ் கொடுத்து அனுப்புவாராம். அதில் ரூபாய் ஐந்தாயிரம் பணம் இருக்குமாம். அவ்வளவு பணம் கொடுத்தால் ஏன் திரும்ப அவனிடம் எழுத மாட்டேன் என்று வாலி பாக்கியராஜை பற்றி கலகலப்பாக முன்னதாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











