பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா தற்சமயம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண பிரச்சனைக்காகத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் டிஸ்டார்ஜ் ஆகிவிடுவார் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவருடைய நண்பரும் உதவி இயக்குநருமான சித்ரா லட்சுமணன் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் எப்படி உருவானது என்பது பற்றி கூறியுள்ளார்.

அதிர்ச்சி தோல்வி
பாரதிராஜா இயக்கிய முதல் ஐந்து படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன் வைத்திருந்த கதையை நிழல்கள் என்கிற பெயரில் படமாக்க திட்டமிட்டிருந்தார். இதனை கேள்விப்பட்ட பலரும் மணிவண்ணன் கதை எல்லாம் படமாக்கினால் ஓடாது என்று குறை கூறியுள்ளனர். அதையும் மீறி முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிழல்கள் படத்தை எடுத்தார். அனைவரும் கூறியது போலவே அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர் வெற்றிகளை கண்ட பாரதிராஜாவிற்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாம்.

மீண்டும் மணிவண்ணன்
வழக்கமாக இதுபோல நடந்தால் மீண்டும் அந்த நடிகர்கள் பக்கமோ கதாசிரியர்கள் பக்கமோ இயக்குநர்கள் போக மாட்டார்கள். ஆனால் பாரதிராஜா அதனையே சவாலாக எடுத்துக் கொண்டு, தான் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கும் மணிவண்ணன்தான் கதை என்று அறிவித்துவிட்டு அந்த படத்திலும் புது முகங்களை வைத்துதான் எடுக்கப் போவதாக திட்டமிட்டிருந்தார். அப்படி தொடங்கப்பட்டதுதான் அலைகள் ஓய்வதில்லை படம். பல புது முகங்களை தேடியும் அவருக்கு கதாநாயகன் கிடைவில்லை.

முரளி முத்துராமன்
அப்போதுதான் ஒரு நாள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் பேட்மிட்டன் விளையாடுவதை பார்த்துள்ளார் பாரதிராஜா. யார் அந்த இளைஞன் என்று கேட்க முத்துராமனின் மகன் என்று சித்ரா லட்சுமணன் கூற காரில் இருந்தபடியே அந்த இளைஞனை கவனித்துள்ளார். பின்பு முத்துராமனிடம் விஷயத்தை கூற அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அதுவரை பைலட் ஆகலாம் என்ற எண்ணத்தில் இருந்த முரளிக்கு அப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

மூன்று காதல்
முரளி நடிக்க வந்த முதல் நாளே எதிர்காலத்தில் பெரிய நடிகன் ஆகப் போகிறார் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியதாம். முதல் நாளே அவருடைய பெயரை கார்த்திக் என்று மாற்றியிருக்கிறார் பாரதிராஜா. கார்த்திக்கின் தோற்றம் அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா துறையில் இருப்பவர்களையும் கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று கதாநாயகிகள் வெவ்வேறு காலகட்டத்தில் கார்த்திகை காதலித்தனாராம். அவரும் அவர்களை காதலித்தாராம். அப்படித்தான் தன்னுடன் நடித்த ராகினி என்ற நடிகையை கார்த்திக் திருமணம் செய்தார் என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











