பிச்சை பெருமாள், சனியன் சகட.. வில்லனாக மிரட்டிய கோட்டா சீனிவாசராவ்.. திரையுலகில் சாதித்தது என்ன?
சென்னை: மூத்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர், பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் சாதித்ததை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான கோட்டா சீனிவாச ராவ், ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கங்கிபாடு கிராமத்தில் ஜூலை 10ந் தேதி 1942ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சினிமாவில் வருவதற்கு முன், நாடகங்களில் நடித்து தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின் 1978 ஆம் ஆண்டு வெளியான 'பிராணம் கரீடு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து பெயர் எடுத்தார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலகட்டத்தில், தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கோட்டா சீனிவாசராவ்: தனது தனித்துவமான நடிப்பால், ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த கோட்டா சீனிவாச ராவ், வில்லன்கள், நகைச்சுவை வேடங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்கள் எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லன் ரோலில், எனக்கு என்று ஒரு தனித்துவமான பாணியை வைத்து இருந்தார். இவர் நடித்த ஆஹா நா பெல்லண்டா, பிரதிகடனா, யமுடிகி மொகுடு, சிவா, பொம்மரில்லு, அதுடு மற்றும் ரேஸ் குர்ரம் போன்ற படங்களில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
பெருமாள் பிச்சை: தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வந்த இவர், 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான படம் 'சாமி' படத்தில், 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த படத்திற்கு பின் தமிழ் ரசிகர்களுக்கு இவர் பிடித்தமான நடிகராக மாறியதை தொடர்ந்து, குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2, காத்தாடி என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். வில்லத்தனம் மட்டுமில்லை காமெடியும் எனக்கு அத்துபடி என்பதை கார்த்தி மற்றும் சந்தானம் நடித்த 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் 'சொக்கத்தங்கம்.. சொக்கத்தங்கம் ஜுவல்லரி' என்ற நகைச்சுவையில் நையாண்டி செய்து சிரிக்க வைத்து இருப்பார். இவர் கடைசி திரையரங்க வெளியீடு 2023 இல் வெளியான சுவர்ண சுந்தரி திரைப்படம்.
மருத்துவராகும் ஆசை: சினிமாவைத் தவிர, அரசியலிலும் தீவிரமாக செயல்பட்ட கோட்டா சீனிவாச ராவ், 1999 முதல் 2004 வரை, விஜயவாடா கிழக்கின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பல படங்களில் அரசியல்வாதியாக நடித்து இருக்கும் கோட்டா சீனிவாச ராவ், அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர். நடிப்புத் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றினார். அவரது ஆரம்பகால லட்சியம், தனது தந்தையைப் போலவே மருத்துவராக வேண்டும் என்பதே ஆகும். ஆனால் கல்லூரியில் நாடகத்தில் இருந்த ஈடுபாடு அவரை நடிப்புத் துறையின் பக்கம் இழுத்து வந்துள்ளது.

750 படங்கள்: தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கோட்டா சீனிவாச ராவுக்கு 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும், ஆந்திர அரசு பல நந்தி விருதுகளை கொடுத்து இவரை கௌரப்படுத்தி உள்ளது. கோட்டா சீனிவாச ராவுக்கு ருக்மணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது ஒரே மகன் கோட்டா வெங்கட அஞ்சநேய பிரசாத்தும் ஒரு நடிகராவார். அவர் 2010 ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கோட்டா சீனிவாச ராவின் இளைய சகோதரர் கோட்டா சங்கர ராவ், சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்ட சீனிவாச ராவ் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











