twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னி எடுக்கும் காஸினோ ராயல்

    By Staff
    |

    டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக நடித்து வெளியாகியுள்ள கேஸினோ ராயல் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. திரையிடப்பட்ட மூன்றே நாளில் ரூ. 400 கோடியை வாரியுள்ளாராம் புதிய ஜேம்ஸ் பாண்ட்.

    இயான் பிளமிங் தனது துப்பறியும் கதையில் உலவ விட்ட கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 இன்று உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்து வைத்துள்ளது.

    ஜேம்ஸ்பாண்ட் 007 கதாபாத்திரத்தை வைத்து இதுவரை 20 படங்கள் வந்து விட்டன. இப்போது 21வது படமாக காஸினோ ராயல் வெளியாகியுள்ளது.

    புதிய பாண்ட் ஆக இங்கிலாந்து நாடக நடிகர் டேணியல் கிரேக் நடித்துள்ளார்.கிரேக்குக்கு இது முதல் பாண்ட் படம். 1953ம் ஆண்டு பிளமிங் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு காஸினோ ராயல் உருவாகியுள்ளது. மார்ட்டின் கேம்பல் படத்தை இயக்கியுள்ளார். இது ஏற்கனவே டிவி தொடராகவும், மேடையில் நாடகமாகவும் அரங்கேறியுள்ளது.

    காஸினோ ராயலின் கதை ரொம்ப சிம்பிள். சந்தேகப்படும் யாரையும் (தீவிரவாதிகள்) சுட்டுத் தள்ளும் உரிமை பாண்டுக்குக் கிடைக்கிறது. இதையடுத்து ஒரு தீவிரவாதியைத் தேடி மடகாஸ்கருக்குப் பறக்கிறார் பாண்ட்.

    அதன் பின்னர் வழக்கமான பாண்ட் சாகசங்கள் தொடங்குகின்றன.காஸினோ ராயல் என்ற சூதாட்ட விடுதியிலிருந்துதான் தீவிரவாதிகளுக்கு பணம் பாய்கிறது என்பதை அறிந்த பாண்ட் அங்கே செல்கிறார். தான் தேடி வந்த தீவிரவாதி அங்கே சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அனுப்புவதையும் அறிகிறார்.

    அவனுடன் மோதி அவனை வெல்ல திட்டமிடும் பாண்ட், சூதாட்டத்தில் குதிக்கிறார். ஆனால் சூதாட்டத்தில் கில்லாடியான அந்தத் தீவிரவாதியிடம் முதலில் ரூ. 70 கோடியை தோற்கிறார். பாண்ட் ஆச்சே, சும்மாவா?

    அடுத்தடுத்த ரவுண்டில் தீவிரவாதியை வென்று ரூ. 600 கோடி வரை சம்பாதித்து எதிரியை வளைக்கிறார்.

    தீவிரவாதியைத் தேடுடிப் போகும் வழியில் ஹீரோயின் ஈவா க்ரீனை ஒரு அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவருடன் காதல், எதிரிகளுடன் மோதல் என வழக்கமான விஷயங்களுடன் படம் தொடருகிறது.

    38 வயதான கிரேக் புதிய பாண்ட் நடிகராக நடிக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டதுமே நிறைய எதிர்ப்புகள். இவராவது, பாண்ட் ஆக நடிப்பதாவது. இந்த முகரக்கட்டைக்கும், பாண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என ஏகப்பட்ட அதிருப்தி விமர்சனங்கள்.

    அந்த அளவுக்கு முந்தைய பாண்ட் ஆன பியர்ஸ் பிராஸ்னன் ரசிகர்களைக் கவர்ந்திருந்ததூன் இந்த கோப விமர்சனங்களுக்குக் காரணம். மேலும் இதுவரை நடித்த பாண்ட் நடிகர்களின் வசீகர முகம் கிரேக்குக்கு இல்லை என்பதும் கோபத்திற்கு இன்னொரு காரணம்.

    இத்தனை எதிர்ப்புகளையும், எகத்தாளங்கைளயும் கடந்து வெளியாகியுள்ளது காஸினோ ராயல். எந்த அளவுக்கு எதிர்ப்புக் கிளம்பியதோ அதை விட பல மடங்கு ராயல் வரவேற்பைக் கொடுத்து அசத்தி விட்டனர் ரசிகர்கள்.

    4 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள பாண்ட் படம் என்பதாலும், படம் எதிர்பார்க்கப்பட்டதை விட சிறப்பாக வந்திருப்பதாலும், டேனியேல் கிரேக் நடிப்பில் அசத்திவிட்டதாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கிரேக்குக்கு ஒரு தனி ரசிகர் வட்டமும் உருவாகி நாளுக்கு நாள் விரிவடைய ஆரம்பித்துவிட்டது.

    கிட்டத்தட்ட ரூ. 650 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் திரையிட்ட 3 நாட்களிலேயே ரூ. 400 கோடியை வாரிக் கொண்டுவிட்டது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் ரூ. 200 கோடியை அள்ளியுள்ளதாம். பிற நாடுகளில் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

    இந்தியாவிலும் காஸினோ ராயல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இப்படத்தை டப் செய்து ஓட்டிக் கொண்டுள்ளனர். டேனியேல் கிரேக், டேய் வேணாம், நான் தான் பாண்ட்.. நான் அடிச்சா கிழிஞ்சிறும் பேண்ட் என்று தமிழில் பேசி அடி பின்னிக் கொண்டிருக்கிறார்.

    ஒவ்வொரு பாண்ட் படத்திலும் ஒரு விசேஷ அம்சம் இருக்கும். காஸினோ ராயலில் ஒரு சூப்பர் கார் இடம் பெற்றுள்ளது. படம் முழுவதும் பாண்டுடன் பயணிக்கும் இந்த கார் பல சாகசங்கைளச் செய்கிறது. இந்தக் காரை அடுத்த வருஷம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளார்களாம்.

    முந்தைய பாண்ட் படமான (பிராஸ்னன் நடித்தது) டை அனதர் டே உலகம் முழுவதும் 430 மில்லியன் டாலரை அள்ளியது. இதுதான் பாண்ட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம். அந்தச் சாதனையை ராயல் முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாண்ட்டை வெல்ல இன்னொரு பாண்ட்தான் வேணும்..

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X