twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழைய சென்னையின் அடையாளம் நடராஜுக்கு மூடுவிழா!!

    By Shankar
    |

    Nataraj Theater Chennai
    எத்தனையோ விஷயங்களில் கசப்பான நினைவுகள் இருந்தாலும், மனம் எப்போது நினைத்தாலும் இனிமையாகவே உணரும் ஒரு விஷயம் திரையரங்குகள்.

    அதுவும் பள்ளி / கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்ட அல்லது வீட்டுக்குத் தெரியாமல் இரண்டாவது ஷோ பார்த்த திரையரங்குகளின் நினைவுகள், மனதுக்குப் பிடித்தவளின் முகத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும். காரணம், கூத்து, நாடகம், சினிமா என பொழுதுபோக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்!

    இத்தகைய சினிமா அரங்குகள் ஒவ்வொன்றும் மூடுவிழா காணும்போதும், மனம் சற்று கனத்துப் போவது உண்மை.

    சென்னையில் ரஹேஜா டவராக மாறிவிட்ட எல்பின்ஸ்டோன், பின்னாளில் அலங்காராக அறியப்பட்டு இப்போது கமர்ஷியல் வளாகமாகிவிட்ட குளோப், பிளாஸா, பாரகன், கெயிட்டி, சன், சித்ரா, சயானி, கிரவுன், மினர்வா, முருகன், மேகலா, ஆனந்த், மினி ஆனந்த், சபையர், எமரால்ட், ப்ளூ டடமன்ட் காமதேனு, உமா, ராம், புவனேஸ்வரி, வசந்தி, ராக்ஸி, சரஸ்வதி, பத்மநாபா... இப்படி மூடு விழா கண்ட அரங்குகள் ஏராளம்.

    பழைய சென்னைவாசிகளை அல்லது எழுபது எண்பதுகளில் இங்கே 55 காசுக்கும் 1 ரூபாய்க்கும் படம் பார்த்தவர்களைக் கேட்டால் கண்கள் மலர, அந்தக் கால இனிமை பேசுவார்கள்.

    மூடுவிழா காணும் திரையரங்குகளில் வரிசையில் இப்போது புதிதாய் இடம்பிடித்துள்ளது நடராஜ். சென்னையின் மிகப் பழமையான தியேட்டர்களில் இதுவும் ஒன்று. சூளையில் திறக்கப்பட்ட முதல் தியேட்டர். 1964-ல் திறக்கப்பட்ட இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் ஜெமினியின் வாழ்க்கைப் படகு.

    பின்னர் அமரர் எம்ஜிஆரின் தாழம்பூ, நடிகர் திலகத்தின் அஞ்சல் பெட்டி 520 போன்ற படங்கள் வெளியாகின.

    ஆனால் இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான ஷோலே இங்கு திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து யாதோங்கி பாரத், ஹம்கிஸிஸே கம்நஹி கம்நஹி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் இங்கு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன. இந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் வட மாநில மக்களின் விருப்பமான திரையரங்கமாக இருந்தது நடராஜ்.

    கால மாற்றம், வசதிக் குறைவு, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கேற்ப நவீன வசதிகள் இல்லாமை போன்றவற்றால் நடராஜ் தள்ளாட ஆரம்பித்தது. இருந்தாலும் அவ்வப்போது எம்ஜிஆரின் பழைய படங்களை புத்தம் புதிய பிரிண்டாக்கி, ரசிகர்கள் ஆதரவோடு திரையிட்டு வந்தது நடராஜ்.

    இந்த நிலையில் இத்திரையரங்கு திடீரென மூடப்பட்டு உள்ளது. தியேட்டரை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    சூளை பகுதியில் இருந்த பிரபலமான திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நடராஜும் இப்போது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது, அந்தப் பகுதியில் வசிக்கும் பழைய காலத்து ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கிவிட்டது.

    ஆனால், மீண்டும் இங்கு வணிக வளாகம் எழும்பும்போது, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் இரண்டு திறக்கப்படும் என பங்குதாரர்களில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். சூளை ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல்!

    English summary
    Natraj, one of Chennai's oldest theaters had closed its screen today permanently. The theater campus will be demolished soon and a big commercial complex will be constructed later.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X