ஆட்டோகிராப் -2
மாயக்கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகிப் போய் விட்டதால் அப்செட் ஆகியுள்ள சேரன், தனக்கு பெரும் பெயரை வாங்கித் தந்த ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த சேரனின் திரையுலக பயணம் மாயக்கண்ணாடியில் சற்றே சறுக்கியுள்ளது. இப்படித்தான் முன்பு தேசிய கீதம் படத்தில் லேசாக சறுக்கினார் சேரன். ஆனால் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து அருமையான படங்களைக் கொடுத்தார்.அதேபோல அவர் பெரிதும் எதிர்பார்த்த மாயக்கண்ணாடி எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தராததால், அப்செட் ஆகியுள்ளார். இருந்தாலும், வழக்கம் போல், சோர்வடையாமல், அடுத்த படம் குறித்த சிந்தனையில் தீவிரமாக உள்ளார்.
தற்போது கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கமலினி முகர்ஜியுடன் நடித்து வருகிறார் சேரன். இந்தப் படத்திற்கு இப்போது சிறிது இடைவெளி கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு அடுத்து தான் இயக்கப் போகும் படம் குறித்த சிந்தனையில் மூழ்கியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சேரன் தீர்மானித்திருக்கிறாராம். 2ம் பாகத்தை இன்னும் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் சொல்ல அவர் முடிவு செய்துள்ளார். இப்படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சேரன், பிரிவோம் சந்திப்போம் முடிந்த பின்னர் ஆட்டோகிராப் 2ம் பாகத்திற்கு வருகிறாராம்.
சியர்ஸ் சேரன்.


Click it and Unblock the Notifications











