twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைப்பட நகருக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார் முதல்வர்!

    By Chakra
    |

    Rajini
    சென்னை: பையனூரில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் 'கலைஞர் திரைப்பட நகரத்துக்கு', முதல்வர் கருணாநிதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார். விழாவுக்கு வரும் கருணாநிதியை திரைப்பட கலைஞர்கள் ஊர்வலமாக அழைத்து செல்கிறார்கள்.

    விழாவில் கலந்து கொள்ள நடிகர்-நடிகைகள் தனி பஸ்சில் வருகிறார்கள்.

    இதுகுறித்து தமிழ் திரையுலகின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை:

    "ஒட்டுமொத்த திரையுலகினர் வீடுகள் கட்டிக்கொள்ள சென்னை அருகே உள்ள பையனூரில் 96 ஏக்கர் இடம் வழங்கி, முதல்வர் கருணாநிதி திரைத்துறையினர் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வைத்துள்ளார். அந்த இடத்துக்கு திரையுலகினர் வைத்துள்ள பெயர், கலைஞர் நகரம்.

    அங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

    ரஜினிகாந்த்

    இயக்குநர் கே.பாலசந்தர், மத்திய மந்திரிகள் தாசரி நாராயணராவ், ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஜித்தேந்திரா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மம்முட்டி, வெங்கடேஷ், வாகை சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, விடுதலை ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வரவேற்றுப் பேசுகிறார்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறுகிறார்.

    ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் முதல்வர்!

    விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட வரும் முதல்-அமைச்சர் கருணாநிதி, பையனூர் எல்லையில் இருந்து விழா மேடை வரை 2 1/2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறார்.

    ஊர்வலத்தில் குதிரைகள், மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும். மேளதாளங்கள் முழங்க, கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். வழிநெடுக முதல்வரை வரவேற்று அலங்கார வளைவுகள், பேனர்கள் இடம்பெறும்.

    தனி பஸ்ஸில் நடிகர்-நடிகைகள்:

    விழாவில் கலந்துகொள்ள நடிகர்-நடிகைகள் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து தனி பஸ்சில் வருகிறார்கள். மொத்தம் 150 பஸ்களிலும், 500 கார்களிலும் திரைப்பட கலைஞர்கள் திரண்டு வருகிறார்கள்.

    சின்னத்திரை கலைஞர்கள் 20 பஸ்களில், ஏவி.எம்.ஸ்டூடியோவில் இருந்து புறப்பட்டு வருகிறார்கள்.

    கலைஞர் நகரில் திரையுலகின் கடைநிலை ஊழியரும் குடும்பத்துடன் வசிப்பதற்கு வசதியாக ஒரு படுக்கை அறை, சமையல் அறை, வரவேற்பரை, குளியல் அறை மற்றும் கழிப்பிட வசதியுடன் 350 சதுர அடியில், ரூ.2 லட்சம் விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அதற்கடுத்ததாக 600 சதுர அடியில் 2 படுக்கை அறை வசதியுடன் உள்ள வீடு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

    மேலும் 800 சதுர அடியிலும், 1,000 சதுர அடியிலும் ஏனைய திரைத்துறையினருக்கு வீடுகள் கட்டப்படும். முத்தாய்ப்பாக அங்கு 4 படப்பிடிப்பு தளங்கள் கட்ட முனைப்போடு வேலைகள் நடைபெறுகின்றன.

    அந்த படப்பிடிப்பு தளத்தை வருகிற 2011-ம் வருடம் ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கல் அன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்."

    -இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X