காமெடி நடிகர்களின் கண்ணீர் கதை: இனக்கலவரத்தால் உறவுகளை இழந்து.. பிழைப்பு தேடி ஓடி வந்த போண்டா மணி!
சென்னை: போண்டா மணி என்ற பெயரை கேட்டதும், "அடிச்சி கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க" என்ற காமெடி தான் பலருக்கும் நினைவிற்கு வரும். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு, பிழைப்புக்காக தமிழ்நாடு வந்து, படிப்படியாக தனது திறமையால் முன்னேறி சம்பாதிக்கும் நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் போண்டா மணி. இந்த செய்தி தொகுப்பில், நடிகர் போண்டா மணியின் கண்ணீர் கதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கேத்தீஸ்வன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இலங்கை மன்னார் பகுதியைச்சேர்ந்த மாரிமுத்து செட்டியாருக்கும் மகேசுவரிக்கும் 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ந் தேதி பதினைந்தாவது மகனாக பிறந்தார். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மொத்தம் 18 பேர், இதில் எட்டு பேர் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர், மன்னாரில் இருந்த போது, மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அந்த கலைமன்றம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பிழைப்புக்காக தமிழ்நாட்டிற்கு இலங்கையிலிருந்து அகதியாக இராமேசுவரம் வந்தார்.

நடிகர் போண்டா மணி: பல இடத்தில் வேலை தேடி அலைந்த போண்டா மணிக்கு, கலைநிகழ்ச்சிகளில் நடித்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தை வைத்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆனார். இவர் நடித்த முதல் படம் பாக்கியராஜ் இயக்கிய பவுனு பவுனுதான். அந்த படத்தை தொடர்ந்து, மணிக்குயில், பொன்விலங்கு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து இவர் நடித்து வந்தாலும் இவருக்கு பெயர் சொல்லும் வகையில் எந்த கதாபாத்திரமும் அமையவில்லை. இதைத்தொடர்ந்து, காமெடியில் டாப்பில் இருந்த வைகை புயல் வடிவேலுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நடிகர் போண்டா மணி.
இருவரும் சேர்ந்து நடித்த படத்தின் காமெடிக்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததால், வடிவேலு,சிங்கமுத்து, போண்டா மணி காமினேஷனில் பலத்திரைப்படங்கள் வெளியாது. குறிப்பாக போண்டா மணியும் வடிவேலுவுடன் இணைந்து குளக்கரையில் ஒரு காமெடியில் நடித்து இருப்பார்கள். "அடிச்சி கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க" என்ற காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல, வின்னர் படத்தில், எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா ரத்தமா என இருவரும் இணைந்து செம அலப்பறை செய்து இருப்பார்கள்.

போண்டா மணி சொன்ன விஷயம்: "அடிச்சி கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க" என்ற காமெடியில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகராம். அந்த நேரம் போண்டா மணி, வடிவேலுவை பார்த்து வணக்கம் சொல்லி இருக்கிறார். அப்போது, தான் இந்த ரோலில் போண்டா மணி நடித்தால் சரியாக இருக்கும் என நினைத்த வடிவேலு, அவரை இந்த குளத்தில் இறங்க சொல்லி இருக்கிறார். வடிவேலு சொன்னதும், மறுவார்த்தை பேசாமல் போண்டா மணி அந்த குளத்தில் இறங்கி, அப்படியே மூச்சைபிடித்துக்கொண்டு இருந்து இருக்கிறார். அந்த காட்சி உண்மையில் பலரை சிரிக்க வைக்க அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்துவிட்டார்களாம். இதை போண்டா மணியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
திடீர் மரணம்: இப்படி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நேரத்தில் போண்டா மணி சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாதம் ஒருமுறை டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இதற்கு பல நடிகர்கள் பண உதவி செய்துள்ளனர். இவரின் மருத்துவ செலவுக்காக நகைச்சுவை நடிகர் மயில்சாமி பல உதவிகளை செய்துள்ளார். ஆனால், போண்டா மணிக்கு முன்பாகவே மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்தது தான் வேதனை. நோய் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், கைநீட்டி முன்பணம் வாங்கிவிட்டதால், உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் நடிப்பதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார். இரவு 11.30 மணியளவில் பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டிற்கு போண்டா மணி சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவரின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், இவரின் இறுதிச்சடங்குக்கு கூட வடிவேலு போகவில்லை என்பது தான் வேதனை.


Click it and Unblock the Notifications











