twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளி திரை விருந்து

    By Staff
    |
    Click here for more images
    புத்தாடை அணிந்தாயிற்று, பட்டாசு போட்டாசு, பலகாரம் சாப்பிட்டாச்சு. அடுத்து என்ன, சினிமாதான்.

    தீபாவளிக்கு 6 முக்கிய படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளன.

    அழகிய தமிழ்மகன்:

    விஜய், ஷ்ரியா ஜோடியாக நடிக்கும் அழகிய தமிழ்மகன் படத்தை பரதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நமீதாவும் இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

    போக்கிரி மெகா வெற்றியைத் தொடர்ந்து அழகிய தமிழ் மகனும் விஜய்க்கு வெற்றி தேடித் தரும் என விஜய் தரப்பு
    நம்பிக்கையுடன் உள்ளது.

    விஜய் அழகிய தமிழ்மகனில் 2 வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளிக்கு அழகிய தமிழ் மகன் வருமா என்பதில் முதலில் சந்தேகம் ஏற்பட்டது. படத்தின் விநியோகஸ்தரான பிரிமீட் சாய்மீரா நிறுவனம் திடீரென விலகிக் கொண்டதால், வருமா, வராதா என்ற குழப்பம்
    நிலவியது.

    ஆனால், எல்லா சிக்கல்களையும் வென்று படம் வெளியாகிறது

    வேல்:

    கஜினிக்கு பிறகு வெற்றி ஜோடிகளான சூர்யா-ஆசின் ஜோடி நடித்துள்ள 2வது படம் வேல். இந்த படத்தை ஹரி இயக்குகிறார்.

    சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சில்லென்று ஒரு காதல் படத்திற்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் வேல் படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    சூர்யாவின் அட்டகாச அதிரடி நடிப்பு, ஆசினின் அசத்தல் நடிப்பு, வடிவேலுவின் வெடிக் காமெடி என பல கலவையுடன் பட்டையைக் கிளப்பு வருகிறது வேல்.

    பொல்லாதவன்:

    அதிரடிப் படமாக திரைக்கு வர தயாராக உள்ள தனுஷ்-திவ்யா நடித்த பொல்லாதவன் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க கதிரேசன் தயாரித்துள்ளார்.

    பொல்லாதவன் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் படமாக இருக்குமாம். அமைதியாக செல்லும் தனுஷின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவரை ரவுடிகளோடு மோதச் செய்கிறதாம்.

    சமீப காலமாக கதைகளைப் பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் ெபால்லாதவன் கதையும் தனுஷுக்கு வெற்றி தேடித் தருமா என்பதை கொஞ்ச நாள் கழித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    கண்ணாமூச்சி ஏனடா:

    யுடிவி மற்றும் ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் கண்ணா மூச்சி ஏனடா. இந்த படத்தை பிரியா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    சத்யராஜ், ராதிகா, பிருத்விராஜ், காதல் சந்தியா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காதல், சென்டிமென்டுடன் தயாராகியுள்ள படம் என்றாலும், சத்யராஜின் வழக்கமான லொள்ளும் சேர்ந்துள்ளது இந்த படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

    மச்சக்காரன்:

    ஜீவா-காம்னா ஜெத்மலானி ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை தமிழ்வாணன் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள மச்சக்காரன் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    நான் அவனில்லை வெற்றி படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் தப்பான காரியங்களை செய்யும் நாயகனை, நாயகி காம்னா இடையில் புகுந்து திருத்துகிறாராம். திருத்தல் வேலைகளுக்கு மத்தியில் ஜீவனும், காம்னாவும் காதல், டூயட், அதிரடியில் கலக்குகிறார்கள்.

    பழனியப்பா கல்லூரி:

    அன்பாலயா பிரபாகரன் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஜோடியாக மதுஷாலினி நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.பவன் இயக்கியுள்ளார்.

    படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாம். மூன்று வருடங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்களின் கதையை அழகாக 2.30 மணி நேரத்தில் எடுத்துள்ளார்களாம்.

    அர்ஜூமான் என்ற புதுமுகம் மற்றும் ஷகீலா-அக்ஷயாவின் சலசல கவர்ச்சியும் படத்துக்கு பக்காவான பலமாக இருக்கும். அவருடன சேர்ந்து காமெடியைக் கலந்திருப்பவர் கஞ்சா கருப்பு.

    இந்தப் படங்கள் தவிர வேறு சில குட்டிப் படங்களும் கூட தீபாவளி ரேஸில் கடைசி நேரத்தில் சேரலாம் என்று தெரிகிறது.

    பீமா இல்லை:

    விக்ரம்-த்ரிஷா நடித்த பீமா படம் திரைக்கு வர ரெடியாக இருந்தாலும், ஏ.எம்.ரத்னம் பல சிக்கல்களை சந்தித்துள்ளதால் பீமா தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை.

    இதேபோல அஜீத்தின் பில்லா தயாரிப்பில் உள்ளதால் தீபாவளிக்கு வரவில்லை.

    ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் தீபாவளிக்கு இம்முறை ரிலீஸாகவில்லை. இதனால் அவர்களின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், சிவாஜி என்ற விருந்தே இன்னும் செரிக்காததால் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தி கிடையாது.

    கமலின் தசாவதாரம் பொங்கல் விருந்தாக வரவுள்ளது.

    Read more about: cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X