Rajinikanth - ரஜினிகாந்த்தை ஷூட்டிங்கில் ஒழுங்காக பார்த்துக்கொள்ளவில்லை.. இயக்குநர் பாரதிராஜா உருக்கம்
சென்னை: Bharathiraja (பாரதிராஜா) 16 வயதினிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.
கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை என விமர்சனங்களையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

ஜெயிலர் வசூல்: பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம்கூட மெகா ஹிட்டாகி 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170: ரஜினிகாந்த் இப்போது தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் ரஜினிக்கு 16 வயதினிலே படம் ரொம்பவே முக்கியமானது. அதில் அவர் ஏற்றிருந்த பரட்டை கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது..
பாரதிராஜா பேட்டி: இந்நிலையில் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கும் பாரதிராஜா, “16 வயதினிலே படத்தில் கமல் ஹாசனுக்கு சம்பளம் 35,000 ரூபாய். ரஜினிக்கோ 5000 ரூபாய்தான் சம்பளம். ஏனெனில் அப்போது அவர் வளர்ந்துவரும் நடிகர். கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலமாக கவனிப்பு இருக்கும். சாப்பாடு முதல் தங்கும் இடம் வரை அனைத்தையும் அவர்களுக்கு செய்துகொடுத்தேன்.
ரஜினியை கவனிக்கவில்லை: அதேசமயம் ரஜினிகாந்த்தை நான் ஒழுங்காக கவனித்துக்கொள்ளவில்லை. அவர் எங்கே தங்கினார் எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் என்பதையெல்லாம் பற்றி நான் கவனிக்கவில்லை. இருந்தாலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் 16 வயதினிலே படத்தில் நடித்தார். நான் அவரை சரியாக கவனிக்காததை எல்லாம் ரஜினிகாந்த் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருந்தார். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய நிலையை அடைந்திருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











