வெறும் நான்கு படங்கள்...நாட்டையே திரும்பி பார்க்க வைத்த டைரக்டர் வினோத் பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை : தமிழ் சினிமாவில் நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், நான்கும் பிளாக்பஸ்டர் படங்களாக கொடுத்து டாப் டைரக்டர் ஆனவர் ஹச்.வினோத். அறிமுகம் தேவையில்லாத, வெறும் பெயர் மட்டும் சொன்னாலே தெரியும் அளவிற்கு மிக குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்க கூடியவர்.
Recommended Video
வினோத் இன்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். வினோத் பிறந்த நாள் என்பதால் அஜித் ரசிகர்கள் பலர், அடுத்த வலிமை அப்டேட் எப்போ வரும் என கேட்டு வருகின்றனர்.

சதுரங்க வேட்டையில் அறிமுகம்
2014 ல் நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்தை இயக்கி டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹச்.வினோத். முதல் படத்திலேயே, தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத புதிய வகையான கதையுடன் படத்தை இயக்கி, ரசிகர்களை கவர்ந்தவர். பணம் தான் எல்லா பிரச்சனைக்கு தீர்வு என நினைக்கும் ஒரு சாமாணிய மனிதன். அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக எப்படி எல்லாம் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார், கடைசியில் அந்த பணத்தால் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.

கொள்ளை சம்பவ கதை
கொள்ளை அடிப்பதை மையமாகக் கொண்ட படம் என்றாலும் அதை நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார் வினோத். முதல் படமே சூப்பர் ஹிட் படமானதால் கவனிக்கப்படும் டைரக்டராகி விட்டார் வினோத். இந்த படத்திற்கு வினோத்தே கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருந்தார்.

அசிஸ்டென்ட் டைரக்டர்
முதல் படம் இயக்குவதற்கு முன் பச்சை குதிரை படத்தில் டைரக்டர் பார்த்திபனிடமும், கோலி சோடா படத்தில் விஜய் மில்டனிடமும் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி உள்ளார் வினோத்.பிறகு முதல் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

தீரன் அதிகாரம் ஒன்று
தொடர்ந்து 2016 ல் கார்த்தியிடம் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதையை சொன்னார் வினோத். இந்த கதை கார்த்தியை மிகவும் கவர்ந்ததால் உடனே ஓகே சொல்லி விட்டார் கார்த்தி. உண்மையான கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் வித்தியாசமாக அமைக்கப்பட்ட துப்பறியும் இந்த படமும் செம ஹிட் ஆனது.

அஜித்திற்கும் கதை
கார்த்திக்கு பல விருதுகளையும், பாராட்டையும் பெற்றுத் தந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த போதே, அஜித்திடம் கதை ஒன்று சொல்லி உள்ளார் வினோத்.

அஜித் கொடுத்த ஐடியா
அதில் நடிக்க மறுத்த அஜித், அதே போன்று பல கதைகளில் தான் நடித்து விட்டதாக கூறி உள்ளார். இருந்தாலும் வினோத் படம் இயக்கும் விதம் அஜித்திற்கு மிகவும் பிடித்திருந்ததால் பிங்க் படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என ஐடியா கொடுத்துள்ளார். இதையடுத்து பிங்க் படத்தை பலமுறை பார்த்து விட்டு, அதை தமிழில் ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டார் வினோத்.

2 படங்களுக்கு ஒப்பந்தம்
பிங்க் கதையை தமிழுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை எழுதி, அஜித்திடம் சென்று கூறி உள்ளார். அது அஜித்தை கவர்ந்ததால் உடனே ஓகே சொல்லி உள்ளார். போனி கபூர், அஜித், வினோத் கூட்டணியில் 2 படங்களை இயக்க ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி குறைந்த பட்ஜெட்டில் பிங்க் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை, பெரிய பட்ஜெட்டில் வலிமை படத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

வலிமை தீபாவளி ரிலீஸ்
நேர் கொண்ட பார்வை படத்தை 2019 லும், வலிமை படத்தை 2020 லும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் கொரோனா காரணமாக வலிமை படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. தொடர்ந்து தாமதமாகி வருகிறது. வலிமை படத்திற்கும் வினோத் தான் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடித்து, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சதுரங்க வேட்டை 2
இதற்கிடையே சதுரங்க வேட்டை 2 படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதி உள்ளார் வினோத். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. 2021 லிலேயே இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தல 61 ம் வினோத் தான்
வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருவதால் வினோத்துடன் மற்றொரு படத்தில் பணியாற்ற அஜித்தும், போனி கபூரும் முன் வந்துள்ளனர். அதனால் வலிமை படத்தை தொடர்ந்து தல 61 படத்தையும் போனி கபூர் தயாரிப்பில், வினோத்தே இயக்குவது உறுதியாகி உள்ளது.
சதுரங்க வேட்டையில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த வினோத், தனது அடுத்தடுத்த படங்களான தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை படங்களால் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். தற்போது அஜித்தை வைத்து இயக்கும் வலிமை படத்தை அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டே உலக ஃபேமஸ் ஆக்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











