என்னடா பகவதி பட பாம் சீன்லாம் வருது.. புஷ்பா 2 பரிதாபங்கள்.. இயக்கத்தில் கோட்டை விட்ட சுகுமார்!
சென்னை: இந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான படங்களில் ரசிகர்களை பெரிதும் சோதிக்காமல் கரையேறிய படம் என்றால் அது கல்கி 2898 ஏடி படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படமும் மகாபாரதத்தையும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் துணைக் கொண்டு கலக்கியது. பிரபாஸ் போர்ஷன் சற்றே சோதித்தாலும் கிளைமேக்ஸில் கம்பீரமாக நின்றது. ஆனால், அதன் பின்னர் வெளியான அனைத்து மெகா பட்ஜெட் படங்களும் புரமோஷனுக்கு செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் எடிட்டிங்கிற்கு செலவு செய்தாலே நல்ல படமாக மாறியிருக்குமே என்கிற எண்ணத்தை தான் தோற்றுவிக்கிறது.
அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது எல்லாம் நிஜமாகத்தான் இருக்கும் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. பல இடங்களில் இயக்குநர் சுகுமார் தான் வைப்பது தான் காட்சி என லாஜிக்கே இல்லாமல் புகுந்து விளையாடியிருப்பது அவர் சொல்வதை எல்லாம் செய்து அவுட்புட் திருப்திகரமாக இல்லையே என அல்லு அர்ஜுன் நினைத்து கோபப்பட அனைத்து காரணங்களும் கொட்டிக்கிடக்கின்றன.

புஷ்பா 2 படத்திற்கு எடிட்டராக இருந்த ஆண்டனி ரூபன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு நவீன் நூலி உள்ளே வந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து பின்னணி இசை பணியை மொத்தமாக தமன் மற்றும் சாம் சி.எஸ் மாற்றியமைத்தது சொன்ன நேரத்திற்கு படம் வெளியாக வேண்டும் என்கிற பிரஷர் என அனைத்துமே புஷ்பா 2வில் பூதக்கண்ணாடி வைத்து பார்க்காமலே தெரிகிறது தான் பெரிய பிரச்சனையாகவே உள்ளது.
பகவதி பாம் சீன்: புஷ்பா 2 படத்தில் ஏகப்பட்ட படங்களின் ரெஃபரன்ஸ் மற்றும் பாதிப்புகள் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இயக்குநர் சுகுமார் புஷ்பா படத்தை இயக்கிய விதத்தை பார்த்து ஒட்டுமொத்த தேசமே இப்படியொரு இயக்குநரா? ராஜமெளலிக்கே டஃப் கொடுக்கிறாரே என பாராட்டினர். ஆனால், புஷ்பா 2 படத்தை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்க கொடுத்தும் அவரால் முழுமையான படத்தை கொடுக்க முடியவில்லை என்பது தான் வருத்தமான விஷயமாக மாறியுள்ளது. புஷ்பா 2 படத்தின் கிளைமேக்ஸில் பகவதி பட பாம் சீன் எல்லாம் வருவது எல்லாம் காலக்கொடுமை.

பாகுபலி + கேஜிஎஃப் + அனிமல்: மனைவியை தொட்டதற்கு பாகுபலி படத்தில் கையை பிரபாஸ் வெட்டுவார். தனது அண்ணன் மகளை தொடும் அரக்கர்களை கடித்துக் குதறுகிறார் அல்லு அர்ஜுன். கேஜிஎஃப் பாணியில் வெளிநாட்டில் டீல் பேசி மாஸ் காட்டுவது அந்த படத்தில் பிரதமரிடமே மோதுகிறார். நாம முதலமைச்சரையே மாற்றலாமே என்கிற போர்ஷன் மற்றும் அனிமல் படத்தில் வருவதை போல எல்லை மீறிய ரொமான்ஸ் மற்றும் நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் என புஷ்பா 2 படத்தில் வேண்டுமென்றே பல படங்களின் பாதிப்புகள் சொருகப்பட்டிருப்பது போன்றே தோன்றுகிறது.

டெக்னிக்கல் டீம் மிஸ்டேக்: ஆனால், இவையெல்லாம் சீரான மேக்கிங் மற்றும் எடிட்டிங் வொர்க் இருந்தால் காணாமல் போயிருக்கும். ஆனால், அந்தரத்தில் ரோப் கட்டிக் கொண்டு முதல் சீனில் இருந்து கடைசி கிளைமேக்ஸில் வரை அல்லு அர்ஜுனை ஒரு சூப்பர் மேன் போல சண்டை போட வைத்திருப்பதும் அதை நம்ப வைக்கும் அளவுக்கான டெக்னிக்கல் காட்சியமைப்பும் படுமோசமாக மிஸ் ஆகிறது. பகத் ஃபாசில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அத்தனை லாரிகளை எல்லாம் சுடுவதெல்லாம் மாஸ்டர் படத்தில் விஜய் அம்பு வைத்துக் கொண்டு லாரிகளை கவிழ்க்க முயற்சித்ததை தான் ஞாபகப்படுத்துகிறது. புஷ்பா படத்தை செஞ்சந்தனமாக கொடுத்த இயக்குநர் சுகுமார் புஷ்பா 2 படத்தை சான்டாராவாக கொடுத்தது ஏன் என்கிற வருத்தம் தான் அதிகமான பீலிங்ஸை கொடுக்கிறது.
காப்பாற்றிய கங்கம்மா: என்னதான் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் ஒட்டுமொத்த படத்தையும் அல்லு அர்ஜுனின் அசுரத்தனமான அந்த கங்கம்மா போர்ஷன் நடிப்பு காப்பாற்றிவிடுகிறது. அந்தவொரு காட்சியை பார்க்கவே டிக்கெட் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் தியேட்டரில் போய் சாமியாட்டம் ஆடப் போகின்றனர்.


Click it and Unblock the Notifications











