twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்

    By Ka Magideswaran
    |

    இளையராஜாவின் கொடி உயரப் பறந்து கொண்டிருந்த ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் வேறு சில இசையமைப்பாளர்களும் பெரிய வெற்றிகளின் மூலம் தங்கள் நுழைவினை அமைத்துக்கொண்டனர். அப்போது தொடர்ச்சியாகப் படமெடுத்த இயக்குநர்களில் இராம. நாராயணன் போன்றவர்கள் சங்கர்-கணேசுக்கு வாய்ப்பளித்தனர். எஸ். ஏ. சந்திரசேகரன் தொடர்ச்சியாக விசுவநாதனுக்கு வாய்ப்பளித்தார். தங்கள் படங்களுக்கு இசையமைக்க வேண்டியவர் தங்கள் குடையின்கீழ் நின்று பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய ஏவிஎம் நிறுவனத்தார் நிலையக் கலைஞராக சந்திரபோசினை அமர்த்திக்கொண்டனர். புதிதாய்ப் படமெடுக்க வந்தவர்களில் பலர் இளையராஜாவின் இசையைக் கனவு கண்டனர் என்றாலும் பொருள்வளம், நேரக்குறைவு போன்ற காரணங்களால் புதியவர்களை அறிமுகப்படுத்தத் தலைப்பட்டனர்.

    புதியவர்கள் இசையமைத்த முதல் படங்களும் பாடல்களும் நன்றாகவே கவனிக்கப்பட்டன. மனோஜ்-கியான் இசையமைத்த முதல் படமான ஊமை விழிகள் அதன் பாடல்களுக்காகவே கொண்டாடப்பட்டது. அந்நேரத்தில் வெளியான இன்னொரு படம் சின்ன பூவே மெல்லப் பேசு. அப்படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் பணியாற்றினர். ஒருவர் எஸ். ஏ. இராஜ்குமார். இன்னொருவர் வித்யா சாகர். படத்தின் பாடல்களுக்கான இசையை இராஜ்குமார் கவனித்துக்கொள்ள பின்னணி இசையை வித்யாசாகர் அமைத்திருந்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டு வெளியான சின்ன பூவே மெல்ல பேசு திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. “இதோ ஓர் இசையமைப்பாளர்” என்று இதழ்கள் பாராட்டி எழுதின.

    directors and producers who committed with raja music

    இளையராஜாவிற்கு எதிராகவும் அப்போது சிறு குழுவொன்று செயல்பட்டது. அவர்கள் பட முதலாளிகள் தரப்பிலும் இருந்தனர். இயக்குநர் தரப்பிலும் இருந்தனர். பாடலாசிரியர் தரப்பிலும் இருந்தனர். புதிதாய் ஓர் இசையமைப்பாளர் அறிமுகமாகி வெற்றி பெறும்போது அவரை “இளையராஜாவிற்குச் சரியான போட்டியாளர் வந்துவிட்டார்…” என்று எழுதினர். அன்றைய இதழியல் குறும்புகளில் ஒன்றாக அதனை எடுத்துக்கொள்ளலாம்.

    அத்தகைய குறும்புகள் எப்போது ஓய்ந்தன ? கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் ஓய்ந்தன என்று சொல்லலாம். அக்காலத்தில் வெற்றி பெற்ற புதியவர்களில் ஒருவரான தேவாவின் இசைக்கோப்புமுறை இளையராஜாவை அடியொற்றியதாக இருந்தது. அந்தப் போக்கினைக் கண்ட பிறகு இதழாளர்கள் களைத்துப் போயினர். பிறகு வந்த அறிமுக இசையமைப்பாளளை இளையராஜாவுக்கு மாற்றாக ஒப்பிடுவதைத் தவிர்த்தனர். இளையராஜாவின் இசையைத் தம் படங்களின் வலுவாகக் கொண்டிருந்த இயக்குநர்கள் பலராவர். பல்வேறு காரணங்களால் அவரிடமிருந்து பிரிந்த அவ்வியக்குநர்கள் தம் படங்களுக்கு யாரை இசையமைப்பாளர்களாக அமர்த்திக்கொண்டனர் என்றும் பார்க்கலாம்.

    பாலசந்தரின் பெரும்பாலான படங்களுக்கு எம். எஸ். விசுவநாதனே இசையமைப்பாளர். அவரிடமிருந்து பிரியும் வேளை வரவேயில்லை. பாலசந்தர் இளையராஜாவை நாடி வருவதற்குப் போதிய காலத்தினை எடுத்துக் கொண்டார். நினைத்தாலே இனிக்கும் போன்ற இசைக்கதைப் படத்தை எடுத்தபோதும் பாலசந்தர் விசுவநாதனின் இசையைத்தான் நம்பியிருந்தார். இளையராஜாவை நாடுவதற்கு முன்பாக 'அச்சமில்லை அச்சமில்லை’ என்ற திரைப்படத்தில் நரசிம்மன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்த போதும் பெருவெற்றிப் படத்திற்கான இசை அது என்று கூற முடியவில்லை.

    பெரும் படத்தயாரிப்பு நிறுவனங்களில் பலரும் இளையராஜாவின் இசையை நோக்கி வந்து விட்ட பிறகு கடைசியாக வந்தவர்கள் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தினர். சிவாஜியின் திரைப்பட வாழ்க்கையையும் விசுவநாதனின் இசையையும் பிரித்துப் பார்க்க முடியாது. சிவாஜி நடிக்காத படத்திற்காக, புதுமுக இயக்குநரின் புதிய முயற்சி ஒன்றுக்காக இளையராஜாவை நாடுவதாகக் கூறினார்கள். “சிவாஜி பிலிம்சாரிடம் இளையராஜாவைக் கொண்டு சேர்த்தது நான்தான்” என்று 'அறுவடை நாள்’ திரைப்படத்தின் இயக்குனர் ஜிஎம் குமார் கூறியிருக்கிறார். அப்படிப் படிப்படியாக திரைத்துறைப் பெருமுதலாளிகள் பலரும் இசைஞானியைச் சென்றடைந்துவிட்டனர். புது முயற்சிகளுக்குத்தான் புதியவர்கள் தேவைப்பட்டார்கள்.

    படமெடுக்காமல் இடைநிறுத்தம் செய்திருந்த ஏவிஎம் நிறுவனத்தினர் மீண்டும் படமெடுக்கத் தலைப்பட்டபோது பஞ்சு அருணாசலத்தின் கதைகளையே நாடினர். பஞ்சு அருணாசலம்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் இளையராஜா அங்கே அழைத்துக்கொள்ளப்பட்டது இயற்கையானது. முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் அந்நுழைவைப் பொய்யாக்கவுமில்லை. இளையராஜாவினை நாடிய ஏவிஎம் நிறுவனம் தமக்கென்று ஓர் இசையமைப்பாளரை அமைத்துக்கொள்ளவும் தவறவில்லை. இந்தப் பிரிவு, சேர்க்கை முதலானவற்றைத் தொழில் சார்ந்த பழக்கநிலையாகவும் கருதவேண்டும்.

    சிந்து பைரவி, புன்னகை மன்னன், புதுப்புது அர்த்தங்கள் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவிடமிருந்து பிரிந்த பாலசந்தர் மரகதமணி என்பவரைக் கொணர்ந்தார். அழகன், வானமே எல்லை, கவிதாலயாவின் படமான நீபாதி நான் பாதி ஆகியவற்றுக்கு அவரே இசையமைத்தார். இன்றைக்குத் தெலுங்கில் கீரவாணி என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்குபவர் மரகதமணிதான். கவிதாலயாவிற்காக அனந்து இயக்கிய 'சிகரம்’ என்னும் படத்திற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியமே இசையமைத்தார். அப்படங்கள் யாவும் வெற்றி பெற்றன என்று கூறுவதற்கில்லை.

    இளையராஜாவின் அறைத் தோழமையும் அன்பு நண்பருமான பாரதிராஜாவுக்கும் பிரிவு நேர்ந்தது. அந்தப் பிரிவினால்தான் தேவேந்திரன் என்ற இசையமைப்பாளர் “மண்ணுக்குள் வைரம்” என்னும் படத்தின்வழியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது கன்னடத்தில் பரபரப்பாக இசையமைத்துக் கொண்டிருந்த அம்சலேகா என்பவரும் பாரதிராஜாவின் படங்களுக்குப் பணியாற்றினார். கொடி பறக்குது, கேப்டன்மகள் போன்ற சில படங்களுக்கு அம்சலேகா இசைத்தார்.

    கங்கை அமரன், விசுவநாதன், சங்கர்-கணேஷ் என்று பலரையும் தம் தொடக்கக்காலப் படங்களுக்கு அமர்த்திக்கொண்ட பாக்கியராஜ் பிற்பாடுதான் இளையராஜாவிடம் வந்தார். அவருடன் ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகு பாக்கியராஜே இசையமைப்பில் இறங்கினார். காவடிச் சிந்து, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு அவரே இசை. இளையராஜாவின் திக்குக்கே சென்றிராத கலைப்புலி தாணுகூட “புதுப்பாடகன்” என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிற்பாடுதான் பாலுமகேந்திராவின் படத்திற்காக “வண்ண வண்ணப் பூக்கள்” படத்திற்கு இளையராஜா இசையமைக்க நேர்ந்தது. அப்போது எல்லாரும் இசையமைப்பில் இறங்குவது ஒரு போக்காகவே மாறிப்போனது. பாண்டியராஜன்கூட அவருடைய சொந்தத் திரைப்படமான 'நெத்தியடிக்கு’ இசையமைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உதயகீதம், இதயகோவில் ஆகிய படங்கள் இளையராஜாவின் பாடல்களுக்காகவே ஓடியவை. அவ்வெற்றியில் திளைத்த கோவைத்தம்பியின் 'மதர்லேண்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்தார் இந்தியிலிருந்து இலட்சுமிகாந்த்-பியாரிலால் என்னும் இரட்டையரை 'உயிரே உனக்காக’ என்ற படத்திற்கு அழைத்து வந்தனர். இளையராஜாவின் இசையால் பெரும்பயனடைந்த மணிரத்தினம் இரகுமானை நோக்கிச் சென்றது இந்த போக்கின் கடைசிக் கண்ணியாகக் கருதலாம்.

    - கவிஞர் மகுடேசுவரன்

    English summary
    Cinema article about directors and producers who committed with raja's music
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X