இளையராஜா - ரஜினி - வாலி பாடலை கோவிலில் செதுக்கி வைத்துள்ள கதை தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்க இயக்குநர் பி.வாசு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த இருவரது கூட்டணியில் பல வெற்றி படங்கள் வந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் மன்னன்.
மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

ஜனனி ஜனனி
இளையராஜா அவர்கள் இசையமைத்த பக்தி பாடல்களில் முதன்மையான பாடலாக கருதப்படுவது ஜனனி ஜனனி பாடல்தான். இன்றுவரை அந்தப் பாடலை அடித்துக் கொள்ள திரைப்படங்களில் எந்த ஒரு பக்தி பாடலும் வரவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு உயிரோட்டமுள்ள பாடல் அது. அதில் மிகவும் ஈர்ப்படைந்த இயக்குநர் பி.வாசு மன்னன் திரைப்படத்தை எடுக்கும் பொழுது ஒரு அம்மா பாடல் வேண்டும் என்றும் அது ஜனனி ஜனனி பாடல் போல இருக்க வேண்டும் என்றும் இளையராஜாவிடம் கூறினாராம்.

இளையராஜா பதில்
அதற்கு, அதுபோன்ற பாடல் நினைத்தவுடன் வந்து விடாது. இருப்பினும் அதன் சாயலில் ஒரு பாடல் இசையமைத்து கொடுக்கிறேன் என்று அவர் மெட்டமைத்த பாடல்தான் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல். அதற்கு வாலி அவர்கள் வரிகள் எழுதி இருப்பார். அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்த போது ரஜினி முதலில் அதில் நடிக்க தயக்கம் காட்டினாராம். இயக்குநர் பி.வாசுவிற்கு என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்க, அந்த செய்தி இளையராஜாவிற்கு சென்றுள்ளது. அவரும் ரஜினியை அழைத்து பேசியுள்ளார்.

ரஜினி எதிர்ப்பார்பு
ஏன் அதில் நடிக்க தயக்கம் காட்டுகிறீர்கள் என்று இளையராஜா ரஜினியிடம் கேட்டபோது, படத்தின் முதல் பாடல் துள்ளலாக இருக்க வேண்டும் என என் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது சென்டிமென்ட் பாடலாக இருக்கிறது என்று கூறினாராம். அதற்கு என் மீது நம்பிக்கை வைத்து நடியுங்கள், இந்தப் பாடல் உங்களை குடும்பத்தாரிடமும் தாய்மார்களிடமும் கொண்டு சேர்க்கும் என்று இளையராஜா கூறினாராம்

ரஜினி சமாதானம்
ரஜினி பின்னர் சமாதானமாகி அதில் நடித்தாராம். இளையராஜா கூறியது போலவே அந்தப் பாடல் பலரையும் சென்றடைந்தது. இன்றுவரை அம்மா பாடல்களில் முக்கியமான பாடலாக விளங்குகிறது. அதன் வரிகளை ஒரு கோவில் செதுக்கி வைத்துள்ளார்கள் என்று கவிஞர் வாலி ஒரு பேட்டியில் முன்னதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது பி.வாசு அவர்களின் தாயார் இறந்துபோனார் என்ற செய்தி வந்ததாக குஷ்புவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications